சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பேசுவேன் - உதயநிதி ஸ்டாலின் அடம்

UDHAYANITHI STALIN

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பேசுவேன் - உதயநிதி ஸ்டாலின் அடம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பேசுவேன் என்று தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்குதல், இளைஞரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் என்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று(4.9.2023) தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர், ’’நான் நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சியில் பேசியதைத்தான் திருப்பி திருப்பி பேசுவேன். இன்னும் அதிகமா பேசுவேன். அந்த கூட்டத்தில் பேசும்போதே சொன்னே. சனாதனத்தைபற்றி பேசப்போறேன். சிலருக்கு வயிற்றெரிச்சல் இருக்கும் என்று சொன்னேன். நான் நினைத்தது நடந்திருக்கு. நிலையானது மாற்றம்பண்ண முடியாதது என்பதுதான் சனாதனம் என்று சொல்றாங்க. பெண்களை வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றாங்க. அவங்க வெளியில் வந்திருக்காங்க. பெண்கள் படிக்க கூடாது என்றார்கள். திராவிடம்தான் பெண்களுக்கு படிக்க வாய்ப்பு கொடுத்தது. இப்போதுள்ள காலை உணவு திட்டம் கூட பெண்கள் வெளியில் வந்து படிக்கவேண்டும் என்பதற்குதான். அதுபோல் புதுமைப்பெண் திட்டமெல்லாம் பெண்களுக்கான திட்டம். பெண்கள் மேலாடை அணிய கூடாது என்றார்கள். கணவன் இறந்தால் பெண்கள் வெள்ளாடைத்தான் அணிய வேண்டும், உடன் கட்டை ஏறவேண்டும்  என்றார்கள் இதெல்லாம்தான் சனாதனம். அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன்.  

சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எப்படி கலந்து கொள்ளலாம். அவர் ராஜினமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்கிறாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கலந்து கொள்வதில் தவறில்லை என்கிறேன். அப்படி இருக்கும்போது அவர் ஏன் ராஜினமா செய்ய வேண்டும்’’ என்று திருப்பி கேள்வி கேட்டார் உதயநிதி ஸ்டாலின். பொற்கிளி வழங்கிய இடத்திலும் செய்தியாளர்களிடம், அப்படித்தான் தொடர்ந்து பேசுவேன் என்பதுபோல் பதில் சொன்னார்.  

ஆக, வில்லங்கமாக பேச வேண்டும் என்று அமைச்சர் முடிவெடுத்திருப்பது தெரிகிறது. இதுபோன்று வில்லங்கமாக பேசினால்தான் தேசிய அளவில் பேசப்படுவோம் என்று அமைச்சர் நினைக்கிறார் போல. தேசிய அளவில் சாமான்ய மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புகிறார்கள் போல் தெரிகிறது. 

இப்படி சனாதனம் என்கிற பழைய பாட்டை பாடுவதால் யாருக்கு லாபம் என்பதே இப்போதைக்கு தேசிய அளவில் ஆராயப்படும் அரசியலாகும். மக்கள் யாரை ஏற்கப்போகிறார்கள், யாரை புறக்கணிக்கப்போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.