மத்திய பட்ஜெட்டும் தமிழக முதல்வரும்
M.K.Stalin

அறுபது, எழுபதுகளில் தொலைக் காட்சி சேனல்கள் இல்லாத காலத்தில் தினசரிகளிலும் சிலவார இதழ்களிலும் பட்ஜெட் டைப் பற்றிய பொருளாதார நிபுணர்கள் மற்றும் சாதாரண மக்களின் அபிப்பிராயங்கள் இடம் பெறும். இவை தவிர, பல்கிவாலா போன்றவர்கள் சென்னையில் மத்திய அரசின் பட்ஜெட்டைப் பற்றித்தான் விரிவாகப் பேசுவார்கள். ஒரு வாரம் பத்து நாட்களுக்கு பட்ஜெட்டைப்பற்றித்தான் பேச்சு இருக்கும்.
ஆனால் இந்த 2025-ல் நிலைமையே மாறி விட்டது. பட்ஜெட் டைப் பற்றி நடந்த கூட்டங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. தினசரிகள் மட்டும் குறிப்பாக ஆங்கில தினசரிகள்தான் மத்திய அரசின் பட்ஜெட் பற்றிய செய்திகளை வெளியிடுவதுடன், அதன் சாதக பாதகங்களையும் அலசுகின்றன். தவிர, அரசியல் பிரமுகர்கள் பட்ஜெட்டைப் பற்றி கருத்துக் கூறுவது அல்லது அறிக்கை விடுவது இன்றும் நடக்கிறது. இந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், மத்திய பட்ஜெட்டைப் பற்றிப் போகிற போக்கில் அபிப்பிராயங்களை உதிர்த்திருக்கிறார்.
‘தமிழ் நாட்டின் பெயர் கூட மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லையே. இது ஒரவஞ்சனை, தமிழகத்தை மத்திய அரசு முழுமையாகப் புறக் கணித்திருக்கிறது.’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏதோ நாலாந்தர கத்துக்குட்டி அரசியல்வாதியின் மேம்போக்கான அபிப்பிராயம் போல் தான் இருக்கிறது. ஸ்டாலின் பழுத்த சட்டமன்ற, அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழக சட்டசபையில் மிக நீண்ட காலமாக எம்.எல்.,ஏ., துணை முதல்வர் முதலான பதவிகளில் இருந்து வருகிறவர் முதல்வர் ஸ்டாலின், அவர் இப்படி மேலெழுந்த வாரியாக, போகிற போக்கில் அபிப்பிராயம் சொல்லியிருப்பது ஏமாற்றத்தையே தருகிறது.
பட்ஜெட் என்பது அரசின் வரவு- செலவுத் திட்ட அறிக்கை தான். இதில் அவசியம் இருந்தால் ஒழிய எந்த மாநிலத்தின் பெயரும் இனங்களில் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசின் புதிய திட்டங்கள் என்ன என்பது குறித்து தான் பட்ஜெட் பேசும். அதுவும் மத்தியபட்ஜெட் என்பதுபாமரருக்குக் கூடத் தெரியும். இந்த விஷயம் முதல்வருக்கு எப்படித் தெரியாமல் இருக்க முடியும்?
எந்தப் பிரிவினரையும் விட்டு விடாமல் பெரும் பாலும் அனைத்துத் துறைகளுக்கும் சலுகைகள் கிடைப்பதை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார். 90 சதவிதத்திற்கு மேலான சலுகை அறிவிப்புகள் நாடு முழுவதற்கும் பொதுவானது. விவசாயிகள், தொழில் தொடங்க விரும்பும் எஸ்.சி., எஸ்,டி., பெண்களுக்கு கடனுதவி என்பதெல்லாம் மத்திய பட்ஜெட்டின் முக்கியமான அறிவிப்புகள் அல்லவா? மருந்துகளின் விலைகள் குறையும் வகையில் மருந்துகளுக்கு வரிகள் குறைக்கப்பட்டுள்ள விஷ்யம் முதல்வரின் கண்களில் படாதது ஆச்சரியமே. அனைத்து மாநிலங்களுக்கும் 1.5 லட்சம் கோடி ரூபாயில் வரை கடனுதவி செய்யப்படும் என்பதில் தமிழகமும் அடக்கம் தானே? வருடத்திற்கு12 லட்சம் ரூபாய் வரை வருமானாம் பெறுகிறவர்கள், வரி கட்டத் தேவையில்லை என்பது தமிழ்நாட்டுக்கும் பொருந்தாதா?
ஜி.எஸ்.டி, குறையவில்லையே என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.எந்த அரசும் சலுகைகளை அறிவிக்குமே தவிர ஏற்கனவே வருகிற வருவாயை இழக்க விரும்பாத.ஜி.எஸ்.டி.,யிலிருந்து 50 சதவீதம் மாநிலங்களுக்கே செல்கிறது. தமிழ்நாடும் ஜி.எஸ்,டி.,யின் பலனை அனுபவிக்கத்தான் செய்கிறது என்பது எல்.கே.,ஜி படிக்கிற குழந்தைக்குக் கூடத் தெரியும் ,இதில் ஓரவஞ்சனை , புறக்கணிப்பு எங்கே வந்தது என்பதை முதல்வர் தான் சொல்ல வேண்டும்.
தமிழ் நாட்டின் பெயர் மட்டுமல்ல பல மாநிலங்களின் பெயர்களும் கூடத்தான் இல்லை. பாஜ.க ஆளும் மாநிலங்களின் பெயர் கூட இல்லையே. இதற்கு பெயர் புறக்கணிப்பு அல்ல.. இது மாநில பட்ஜெட் அல்ல. மத்திய பட்ஜெட். மாநில பட்ஜெட் கூட எல்லா மாவட்டங்களின் பெயர்களும் இடம் பெறுவதில்லையே? இப்படி முறையாகப் புரிந்து கொள்வதை விடுத்து, ஓரவஞ்சனை , புறக்கணிப்பு என்று முதல்வர் கூறுவது அர்த்தமற்றது. சாரமற்றது.