கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? - திருப்பரங்குன்றம் சர்ச்சை!
Thiruparankudram
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகக் கருதப்படுவது திருப்பரங்குன்றம். இங்கு மலையடிவாரத்தில் அருள் மிகு சுப்பைரமணிய ஸ்வாமி திருக்கோவிலும், குன்றின் மீது காசி விஸ்வநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளன. குன்றின் வலப்புறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. மேலும் ஜனவரி 18ஆம் தேதிஆடு , கோழிகளை பலி கொடுக்கும் கந்தூரி விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து டிசம்பர் 4 ஆம் தேதி மலையடிவாரத்தில் ‘ மலை மேலுள்ள தர் ஹாவில் ஆடு, கோழிகளை கந்தூரி (பலி) செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன.’ என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலர் கோவில் நிர்வாகத்தில் புகாரளிக்க, கோவில் நிர்வாகம் காவல் துறையில் புகாரளித்தது. இதன் அடிப்படையில் அந்த வாசகம் அரசால் நீக்கப்பட்டது.
டிசம் பர் 25 அன்று கந்தூரி கொடுப்பதற்கு என்று சிலர் சென்ற போது, அங்கிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்தனர். இதையடுத்து டிசம்பர் 31 ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்று அரசு தரப்பு கேட்டுக் கொண்டபோது, இஸ்லாமியர்கள் மலை மேல் தர் ஹாவில் பலி கொடுப்பது வழக்கமான நடைமுறை, அங்கே ஆட்டை வெட்டி தோலுரித்த இடங்களும், சமைத்த இடங்களும் இருக்கின்றன. என்று வாதாடினர். எதிர் தரப்பு’இல்லை’ என்று வாதாடியது. ஆனால் இரு தரப்பிலுமே உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. என்பதால், இதற்கு நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் முஸ்லிம் தரப்பினர் அதை ஏற்காமல் வெளியேறி விட்டனர்.
ஏற்ககெனவே இஸ்லாமியர்கள் குறிப்பிட்டபடி ஜனவரி 18 ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, சிக்கந்தர் தர்ஹாவில் கந்தூரி கொடுப்பதற்கு மீண்டும் கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கிடையில் சிலர் ஆட்டை கழுத்தில் போட்டபடி கந்தூரி கொடுக்க மலையேற முற்பட்டனர். அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200 பேர் அதன் தலைவர் காடேஸ்வர் சுப்பிரமணியன் தலைமையில் கோவிலுக்கு வந்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அவர்களுக்கு எதிராகவும், போலீஸாருடன் வாக்குவாதம் செய்த முஸ்லீம்களுக்கு எதிராகவும் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஜனவரி 22 ஆம் தேதி வக்ஃப் வாரியத்தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி தனது ஆதரவாளருடன் கள ஆய்வு செய்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு வந்தார். காவல் துறை அதிகாரிகள் அவருடன் பேச்சு நடத்தினார்கள். மலையின் மேல் ஆடு, கோழிகளை பலியிட அனுமதியில்லை. ஆனால் சமைத்த உணவை எடுத்து செல்வதற்குத் தடையில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சிலர் கும்பலாக அசைவ, பிரியாணிகளுடன். மலையேறிச் சென்று, அங்கு பிரியாணி சாப்பிட்ட நிலையில் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள். இது ஹிந்து அமைப்பினர் மத்தியில் உஷ்ணத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஹிந்து அமைப்பினர், நவாஸ்கனி மீது கடும் கண்டனத்தை எழுப்பினார்கள்.
ஜனவரி 27 ஆம் தேதி தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் உள்ளூர் பொதுமக்கள் என்ற அடிப்படையில், தங்கள் கிராமத்தில் எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக் இருப்பதாகவும், வெளி நபர்கள் தலையிட்டு, தங்கள் ஊரிலுள்ள நடைமுறைகளில் தலையீடு செய்யக்கூடாது என்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் 30ம் தேதி 11பேரை அழைத்து ஆர்.டி.ஒ. தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த அமைதி கூட்டத்தில் அ.தி.மு.க பிரதிநிதி கையெழுத்திடாமல் வெளியேறினர். மற்ற தி.மு.க. கூட்டணி கட்சியினர்’ வெளி நபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று எழுதி கையெத்து போட்டனர். அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘இந்த பிரச்னைக்குக் காரணம் நவாஸ்கனி தான்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிப்ரவரி 4 ஆம் தேதி ஹிந்து முன்னணியினர் ‘மலையை காப்போம் ’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியபோது, காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்களைத் திரட்டி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் ஆயத்தமானார்கள்.இதையடுத்து 3 ஆம் தேதி அதிகாலை முதல் 4 ஆம் தேதி நள்ளிரவு வரை, மதுரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் கலெக்டர் சங்கீதா.
இதையடுத்து பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வெவ்வேறு ஊர்களில் கைது செய்யப்ப்ட்டார்கள். சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சில ஹிந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர, ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது நீதிமன்றம். இதையடுத்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க, பிரம்மாண்டமான எழுச்சியோடு அந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.
இது குறித்து திருப்பரங்குன்றத்திலுள்ள இஸ்லாமியர்கள் சிலரிடம் பேசிய போது, ‘ காலகாலமாக சிக்கந்தர் மலையில் ஆடு வெட்டி பலியிடும் வழக்கம் இருந்தது வருகிறது . திடீரென்று அதற்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கிறது. அதனால் தான் இத்தனை பிரச்னையும்’ என்று குற்றஞ்சாட்டினார்.
ஹிந்து அமைப்பினர் சிலரிடம் பேசியபோது,’மலை அடிவாரத்திலுள்ள பேட்டை என்ற பகுதியில் ஆடு வெட்டி அங்கேயே சமைத்து அந்த உணவை மேலே கொண்டு போய் பரிமாறுவது தான் வழக்கம் தற்போது கந்தர் மலையை முழுமையாக் வசப்படுத்த நினைக்கிறார்கள். அது தான் சர்ச்சைக்குக் காரணம்’ என்றார்கள்.
ஆனால் இஸ்லாமியர் சிலரோ, ‘ இந்த நகரத்திற்கு பெயர் திருப்பரங்குன்றம் என்று இருந்தாலும், நாங்கள் காலகாலமாக் சிக்கந்தர் மலை என்று தான் குறிப்பிட்டு பேசி வந்துள்ளோம். இது வரைக்கும் அது சர்ச்சையாக் வில்லை. மலையில் சிறிது தூரம் ஏறியதும், நெல்லித் தோப்பு என்றபகுதி இருக்கிறது. அங்கிருந்து சிக்கந்தர் தர்ஹாவிற்கும், காசி விஸ்வாநாதர் கோவிலுக்கும் தனித்தனியே பாதைகள் பிரிந்து விடுகின்றன. மேலும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு மலையின் மறுபுறத்தில் புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, அந்தப் பாதையைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நாங்கள் பலமுறை மலையிலுள்ள தர்ஹாவில் மட்டுமல்லாமல், நெல்லித்தோப்பு பகுதியில் பகுதியில் கூட ஆடு, கோழி பலியிட்டு சமைத்துள்ளோம். ஹிந்து நண்பர்களும் வந்து எங்களோடு உணவருந்தி இருக்கிறார்கள். ஹிந்து கோவில்கள் பலவற்றில் ஆடு, கோழி பலியிடுவது வாடிக்கையானது: அது அசிங்கமானதல்ல. எனவே குறிப்பிட்ட ஒரு சிலர்தான் திட்டமிட்டு இதில் பிரச்னை செய்கின்றனர்’ என்று தெரிவித்தனர்.
ஆனால் ஹிந்துக்கள் சிலரோ, ‘அசைவ கோவில்கள் தனியே உள்ளன.சைவகோவில்கள் தனியே உள்ளன. இந்த திருப்பரங்குன்றம் கோவில் சைவ கோவில். இங்கு யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்: பரிமாற மாட்டார்கள். எனவேதான் இங்கு பிரசனை எழுகிறது’ என்கின்றனர்.ஹெச். ராஜா உள்ளிட்ட சிலர், ‘மலையிலிருந்து தர்ஹாவை அப்புறப்படுத்தப்பட வேண்டும்’ என்று பேசத் துவங்கி உள்ளனர்.
வாதங்களில் முடிவுகள் எட்டப்படுவதில்லை, விட்டுக் கொடுத்தல்களில் தான் முடிவுகள் எட்டப்படுகின்றன். அது சாத்தியமில்லை எனும் போது, உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் நான்கு ரிட் மனுக்கள் மூலம் தான் முடிவு எட்டப்படவேண்டும்.
nadunilai.com