கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் கஞ்சா செடி.!
kallakuruchi

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராம மலை உச்சியில் கள்ளத்தனமாக அனுமதியின்றி கஞ்சா செடி பயிர் செய்து வந்ததாக கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிபாரதி, தனிப்பிரிவு காவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீஸார் கடந்த 17-ம் தேதி ரோந்து பணியின் போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டுபிடித்து, அது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் பர்வதம் ஆகிய இருவரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.
கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் பகுதியில் சற்றேறக்குறைய அரை ஏக்கரில் 1,600 கஞ்சா செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 100 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கஞ்சா செடி வளர்ப்பு சம்பவம் தொடர்பாக கல்வராயன்மலைவாசிகள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரவி இதுதொடர்பாக கல்வராயன்மலையைச் சேர்ந்த அருண் என்பவர் கூறுகையில், “கல்வராயன்மலையில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டினாலே அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்று மலைவாழ் மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் அபராதம் செலுத்தியுள்ளனர். சாலை போடும் பணிக்காக ஒருவர் அதற்குண்டான பொருட்களை கொண்டு சென்று, சாலை போட்ட போது கண்கொத்தி பாம்பாக கண்காணித்து கேள்வி எழுப்பும் வனத்துறையினர், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3 மாதங்களுக்கு மேலாக பயிரிடப்பட்டு கஞ்சா செடி வளர்த்திருப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ஒருவரது நிலத்தில் சட்டத்துககு புறம்பான செயல் நடைபெறும்போது, நில உரிமையாளரை விசாரித்து, கைது செய்யும் காவல்துறை, கஞ்சா செடி வளர்ப்புக்குச் சொந்தமான நிலத்தின் உரிமையாளரான வனத்துறையிடம் விசாரணை நடத்தவில்லை. கஞ்சா செடி வளர்த்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் வனத்துறையினர் இருக்க வாய்ப்புண்டு” என்று தெரிவிக்கிறார்.
காலியாக இருக்கும் வன அதிகாரி பதவி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும், இதுவரை இங்கு மாவட்ட வன அதிகாரி நியமிக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட வன அதிகாரியே, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார். வன பரப்பளவில் விழுப்புரம் மாவட்டத்தை விட கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிக இடத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணியிடம் கேட்டபோது, “கல்வராயன்மலைப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சட்ட விரோத பயிர்கள் வளர்ப்பது புதிதல்ல. அந்தச் செயலில் ஈடுபடுவோரை போலீஸார் அவ்வப்போது பிடித்தும் வருகின்றனர். ஆனால், அதைத்தடுக்க போலீஸாரால் முடியவில்லை.
கல்வராயன்மலையில் பிடிபட்டதாக கூறப்படும் கஞ்சா செடிகள், வனத்துறையினருக்குத் தெரியாமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அங்கு 5 ரேஞ்சர்கள் உள்ளனர். இவர்களின் கண்காணிப்பை மீறி வளர்ப்பது என்பது எளிதானதல்ல. வனப்பகுதியில் தாங்களே அதிகாரம்மிக்கவர்கள் என்ற மனப்பான்மையோடு வனத்துறையினர் செயல்படுகின்றனர். வனப்பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க காரணம், காட்டுப் பகுதிக்குள் போலீஸார் எளிதாக செல்ல நேரிடும் என்பதுதான்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு என்று தனியாக மாவட்ட வன அதிகாரி இல்லாததும் வியப்பளிக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோன்று மாவட்ட வன அதிகாரியும் முக்கியம்” என்று தெரிவிக்கிறார். வனப்பகுதியில் வனத்துறையினருக்குத் தெரியாமல் கஞ்சா செடி வளர்க்க வாய்ப்பில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவிப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெயர் கூற விரும்பாத அவர்கள் தெரிவிக்கையில், “வனத்துறையில் பணியாட்கள் குறைவு.
ஒரு வனச் சரகர் 15 கி.மீ சுற்றளவு பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில், ஏதோ ஒரு மூலையில் நடைபெற்ற சம்பவத்தோடு இணைத்து இப்படி பேசுவது சரியல்ல. ஒவ்வொரு துறையிலும் ஏதேனும் ஒரு குற்றச்செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அதற்காக அந்த துறையினர் மீது நடவடிக்கை எடுக்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பினர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தலைமை வனச் சரகர் பெரியசாமியிடம் இதுபற்றி கேட்டபோது, “கல்வராயன்மலையில் போலீஸாரின் இந்நடவடிக்கைக்குப் பின், வனத்துறையும் சோதனை நடத்தி அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது கைவிடப்பட்டுள்ளது. கஞ்சா செடி பயிரிடுதலையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வனப்பகுதிக்குச் சொந்தமான பகுதியில் கஞ்சா பயிரிட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தவாய்ப்புண்டு. அதேநேரத்தில் எங்களது துறை சார்பாகவும் விசாரணை நடத்தி, கஞ்சா செடி பயிரிட்டவர்களுடன் வனத்துறையினருக்கு தொடர்பிருக்கிறதா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
“பயிர்கள் வைப்பதற்காக எங்கள் விவசாய நிலத்தைச் சிறிதளவு சீரமைப்பு செய்தாலே மோப்பம் பிடித்து தடுக்கும் வனத்துறையினர், பெரிய அளவில் கஞ்சாவை பயிர் செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்?” என்று மலைவாழ் மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
வெறுமனே ஒன்றிரண்டு கைது, சிறுசிறு வழக்குகளின் கீழ் நடவடிக்கை என்று இல்லாமல் கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கல்வராயன்மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.