குறைகளை கேட்க களமிறங்கிய மேயர் - கோரிக்கைகளுடன் குவிந்த மக்கள்

Thoothukudi city News

குறைகளை கேட்க களமிறங்கிய  மேயர் - கோரிக்கைகளுடன் குவிந்த மக்கள்

மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். அவ்வாறு கேட்கும்போது, வழங்கப்படும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் நிறைவேற்றி தரவேண்டும். அதற்கு தயாராக இருந்தால் மட்டுமே பொதுமக்களிடம் மனுக்களை பெறவேண்டும். மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையும், துணிவும் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படியொரு துணிவு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு வந்திருக்கிறது.  

ஒவ்வொரு புதன் கிழமையும் மாநகராட்சி மக்களிடம் மண்டலம் வாரியாக கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என்று சமீபத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று புதன் கிழமை  தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் சொத்துவரி,குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம், சொத்துவரி பெயர் மாற்றம், சொத்துவரி பெயர் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி மனுக்களை மக்கள் ஆர்வமுடன் வந்து கொடுத்தனர். 

இப்படியாக பெறப்பட்ட 97 மனுக்களில் ஒரே நாளில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டிருக்கிறது. தீர்வு காணப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அதற்கான தகவல் தெரிவிக்கும் அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி சம்பந்தபட்டவர்களிடம் வழங்கினார். இது குறித்து மேயர் நம்மிடம், பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குடிநீர் வசதி, சாலைவசதி உள்ளிட்டவகைகளை தொலை நோக்கோடு கட்டமைத்து வருகிறோம். அதேபோல் ஆவணங்களில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளிலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்த முடிவு எடுத்துள்ளோம். ஒரு மண்டலத்தில் வாங்கிய மனுவிற்கு, அடுத்தடுத்த மண்டலங்களில் மனு நீதி நாள் முடிந்து அடுத்த சுற்று வருவதற்குள் அனைத்து மனுவிற்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். 

ஆணையரின் ஒத்துழைப்போடு மக்கள் தேவைகள் மற்றும் நிர்வாக செயல்பாட்டிற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநகராட்சி மக்களுக்கு எந்த குறையுமே இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம். சம்பந்தபட்ட அதிகாரிகளை முடுக்கிவிடும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது என்றார். 

மக்களின் தேவையறிந்து செயல்பட இது நல்லதொரு வாய்ப்பு, பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். கோரிக்கை மனுக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அவற்றை நிறைவேற்றி கொடுப்பதே பிரதான வேலையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை கண்காணிக்கவே தனியொரு அதிகாரியை நியமித்து செயல்படலாம் தவறில்லை.