வரலாற்று பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அரசுக்கும், மாணவர்களுக்கும் வேண்டுகோள்

Varalaaru

வரலாற்று பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அரசுக்கும், மாணவர்களுக்கும் வேண்டுகோள்

உங்கள் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதற்கு உங்கள் கடந்த காலம் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஆம், கடந்த காலம் தெரிந்திருந்தால், நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை சரியாக அமைத்துக் கொள்ள முடியும் என்பது எமது கருத்து. ஒரு தனிநபரோ, ஒரு குடும்பமோ, ஒரு நாடோ அதன் கடந்த காலத்தை நினைவில் கொண்டு செயல்பட்டால் எதிர்காலத்திற்கான நல்ல வழி எளிதில் புலப்படுகிறது.   

பல்வேறு தட்பவெட்ப நிலைகளை ஒருங்கே கொண்டிருப்பதுபோல், பல்வேறு வகையான மக்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் பெருமை நமது தாய்நாட்டின் பண்பாட்டிற்கும், காலாசாரத்திற்கும் கிடைத்த மகுடமாகும். பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் நம் தேசம் ஒரே கலாசாரமாக, பண்பாடுகளை கொண்டதாகவே ஆயிரமாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறது. மக்களாட்சி வருவதற்கு முன்னர் உலகமே அவ்வப்போது மாற்றம் கொண்டதாகவே இருந்திருக்கிறது. அதாவது ஒரு நாடு என்று சொல்லக் கூடிய நிலப்பரப்பு இரவோடு இரவாக இன்னொரு மன்னரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றுவிடும். அந்த வகையில் நம் நாட்டு மன்னர்கள் சுற்றியுள்ள பல நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆண்டு வந்தனர் என்கிற வரலாறு உண்டு. அப்போது விதைத்த பொருளாதாரம், பாதுகாப்பு, வணிகம், மொழி, கலை, இலக்கியம் என்கிற பண்பாடே இன்றும் நிலைத்திருக்கிறது. எங்கும் கிடைக்காத இயற்கை வளம், பல்வேறு தேசத்தாரை சுண்டி இழுந்தது. பலரும் இங்கு வந்து வணிகம் செய்தனர். அவ்வாறு வந்தவர்கள் காலப்போக்கில் ஆட்சியை பிடித்து நம்மை ஆட்டிப்படைக்கவும் செய்திருக்கின்றனர். அதன் பிறகு நாம் எழுந்து நின்று இப்போது சொந்த மக்களை சொந்த தேசத்தாரே வழிநடத்தும் ஜனநாயக முறை இருந்து வருகிறது. 

இதெல்லாம் வரலாறுகள் என்றாலும், இதற்கெல்லாம் முந்தைய வரலாறுகள் ஏராளம், ஏராளம். ஆனால் நம்மிடையே இடைப்பட்ட கால வரலாறுகளே அதிகம் பேசப்படுகிறது. அதாவது வெளியில் இருந்து மொகலாயர்கள் வந்தார்கள், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், டச்சுக்காரர்கள், போச்சுகீசியர் வந்தார்கள் அவர்கள் நம்மை ஆண்டார்கள் என்கிற வரலாறு தொடர்ந்து பேசப்படுகிறது தவிர, நம் நாட்டின் பூர்வீக வளம் என்ன?. நம் நாட்டின் பூர்வீக நிலை என்ன? என்பதெல்லாம் யாருக்கும் பெரிய அளவில் தெரிவிக்கப்படுவதில்லை. அந்நியர் நம்மை அடிமையாக வைத்திருந்த வரலாறுகளே அதிகம் பேசப்படுவதால், நம்மிடம் அவர்கள் நமக்கு செய்த நன்மை, தீமைகளை மட்டுமே நினைக்கிறோம், பேசுகிறோம். இந்த வரலாறு நம்மை அடிமை சிந்தனையோடுதான் வாழச்செய்யும். நம்முடைய கடந்த கால உயரிய வாழ்வியல் முறை, இயற்கை வளத்தை அறிந்தால்தான் நாம் எத்தகைய உயர்வான இடத்தில் இருப்பவர்கள் என்பது தெரியும். இது தெரியாமல்தான் நம்மை நாமே குறைத்து மதிப்பிடும் மனநிலை உருவாகுகிறது. அந்நியர் இங்கு வந்து செய்த நன்மையை மட்டும் அதிகம் கேட்போர் அந்நியரை ஆதரிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறது. அவர்கள் செய்த அட்டகாசங்கள் மறைக்கப்படுவதால் ஏற்படும் விளைவு இது. இதுபோன்ற வரலாறுகளை வேணுமென்றே மறைக்கும் அரசியல் கூட இங்கு இருக்கிறது. அறிவியலையும், பொறியியலையும்,வேதியியலையும் மதிக்கும் அளவிற்கு வரலாறுகளை மதிப்பதில்லை. அதனால் என்ன பயன் என்கிற மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரியில் வரலாற்றுப்பாடம் கடைசியாக வைத்து பார்க்கப்படுகிறது. வேறு குரூப் கிடைக்காதவர்கள் வேறு வழியில்லாமல் வரலாற்றுப்பாடத்தை தேர்ந்தெடுக்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள். சில பள்ளிகளில் வரலாற்று பாடமே இல்லை என்கிற நிலை கூட இருக்கிறது. மற்ற பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதுபோல் வரலாற்று பாடம் படித்த மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதிபடுத்த வேண்டும். அந்த ஏற்பாடு பெரிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் வரலாற்று பாடம் கடைசி வரிசையில் இருக்கிறது. 

ஆனால் அந்த பாடம்தான் நாம் யார், எங்கு வாழ்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்று எடுத்துக் கூறும் பாடமாகும். ஆனால் அதற்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் அது கடை பகுதியில் இருக்கிறது. அறிவியல், பொறியியல், மருத்துவம், வேதியியல் வரிசையில் வரலாறு பாடமும் முதல் நிலை பாட வரிசையில் வைக்கப்பட வேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆதிகாலத்து வரலாறுகள் அனைத்தும் அதில் வைத்திருக்க வேண்டும். மற்ற பிரிவினர் குறிப்பிட்ட துறையை மட்டும் அறிந்தவராக இருப்பர். ஆனால் வரலாறு படித்தோர் அனைத்துறையின் சாரம்சத்தையும் அறிந்திருப்பர் என்கிற நிலை கொண்டு வரப்பட வேண்டும். வரலாற்று பாடம் படித்தால் வேலை கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தை அரசு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். மாணவர்களும் வரலாற்று பாடத்தை சாதாரண பாடமாக படிக்காமல் அதிலும் ஆய்வு செய்யலாம் என்பதை உணர்ந்து வரலாறு பாடத்தை படித்து ஆய்வுகளை நடத்த வேண்டும். அப்போதுதான் நாம் எத்தகைய வலிமை கொண்டவர்கள், நம் நாடு எத்தகைய வளம் கொண்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதை அறிந்துவிட்டால், உயர்வான இடம் தேட நல்ல வழி தெரியும். அப்படி தெளிவான வழியில் நடப்போர் யாரிடமும் அடிமையாக மாட்டார்கள், யாரையும் அடிமையாக்கவும்மாட்டார்கள்.