தேசிய கல்வி கொள்கையை தடுக்கிறதா மெக்காலே கல்வி கொள்கை?
Indian Education
இந்தியாவில் தற்போது இருக்கும் கல்வி முறை ஆங்கிலேயன் மெக்காலேயால் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை மாற்ற வேண்டும். நமக்கென்று தரமான கல்வியை தேசிய அளவில் கொண்டு வரவேண்டும் என்று ஒரு தரப்பு கூறினால், அதிலிருந்து சிலர் மாறுபடுகின்றனர். தேசிய அளவிலான கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர். அப்படியானால் இவர்கள் மெக்காலே கல்வி கொள்கையை ஆதரிக்கின்றனர் என்று அர்த்தமாகிறது.
இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள்,கில்ஜி வம்சம் ஆண்டது.மொகலாயர்கள் ஆண்டார்கள்.இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யபட்டபோது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.
உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது.பாலியும்,பிராகிதமும் வந்தபோது, தமிழ் மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டனது நடந்தேறியது.
வரலாற்றுன் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம்?. தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது?. சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மெளனம் மட்டுமே!
இந்த வரலாற்று மாற்றத்துக்கு முதற்காரணமாக இருந்தவர் மெக்காலே. அவர் உருவாக்கிய மேற்கத்திய கல்வி முறை, அந்த கல்வி முறையில் படித்து அரசு பணியாளர்களாக ஆனவர்கள், அவர்களின் வம்சாவழிகள், அந்த கல்வியை அப்படியே இன்றும் நடைமுறைப்படுத்தும் அரசுகள், கல்வியை வணிகமயமாக்கிய அமைப்புகள், ஆங்கிலப் படிப்பு மட்டுமே உயர்வானது என்று நம்பும் கல்வி நிலையங்கள், அந்தக் கருத்துகளை துதி பாடும் சாமானியர்கள்.. இப்படி சகலருக்கும் இந்த கல்வி மோசடியில் பங்கு இருக்கிறது. தாய்மொழியில் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது அவமானம் ஆகிப்போன சமகால சூழலில், இந்த அநியாயம் எப்படி உருவானது என்பதை கூட நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை.
1834 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் நாள் இந்திய சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இங்கிலாந்தில் இருந்து கடற் பயணம் செய்து மெட்ராசுக்கு வந்து சேர்ந்தார் மெக்காலே. அப்போது வில்லியம் பெனடிக் கவர்னராக இருந்தார். கடற்கரையில் 15 குண்டுகள் முழங்க மெக்கேலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் வில்லியம் பெனட்டிக் கோடைகால ஓய்வுக்காக ஊட்டியில் தங்கி இருந்தார். ஆகவே அவரை சந்திக்க மெக்காலே தானும் ஊட்டிக்கு புறப்பட்டார். மெக்காலேவை ஒரு பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கிக் கொண்டு பெங்களூரு, மைசூர் வழியாக 11 நாட்கள் நடந்து ஊட்டிக்கு சென்றடைந்தார்கள். 400 மைல்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டார் மெக்காலே. அன்று, மெக்காலேவை பல்லக்கில் தூக்கிய நாம் இன்றும் இறக்கி விடவே இல்லை. இந்தியர்கள் ஒவ்வொருவர் முதுகிலும் மெக்காலே இன்னும் உட்கார்ந்து இருக்கிறார். நாமும் வேதாளத்தை சுமக்கும் விக்கிரமாதித்தனை போல மெக்காலே கல்விமுறையை தூக்கிக்கொண்டு அலைகிறோம். மதராசில் நடைபெற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய விஜயம் எப்படி இருந்தது என்று மெக்காலேயிடம் கேட்ட போது, இந்திய மரங்களில் வீசும் காற்று கூட எனக்கு உகந்ததாக இல்லை. ஒரே வெக்கை. எங்கு பார்த்தாலும் கருத்த மனிதர்கள், குடிசை வீடுகள், வாறி இறைக்கும் வெயில் இந்தியா எனக்கு மூச்சு திணறலை தான் ஏற்படுத்துகிறது என்றார்.
யார் இந்த மெக்காலே? அவர் ஏன் இந்தியாவுக்கு வந்தார்?. இந்த இரண்டு கேள்விகளின் பின்புலத்தில் தான் காலணி ஆட்சியின் கடந்த காலம் சுருண்டிருக்கிறது.
தாமஸ் பேபிங்டன் மெக்காலே, 1800-ல் இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது அப்பாவும் அரசுப் பிரதிநிதியாக மேற்கிந்திய தீவுகளில் பணியாற்றியவர். சில காலம் வணிகமும் செய்து இருக்கிறார். மெக்காலே, கே பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஹவுஸ் ஆப் காமன் உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியவர். காலனி விசுவாசிகளின் முதன்மையானவர். ஆகவே, இந்தியாவில் காலனி ஆட்சி வலுப்பெறுவதற்கு திட்டம் தீட்டுவதற்காக பிரிட்டிஷ் அரசு, மெக்காலேவை நியமனம் செய்தது.
இந்தியா சிதறுண்டு கிடக்கிறது. ஒருமித்த சட்ட நடைமுறை இல்லை. உட் பூசல்கள் நிரம்பி இருக்கிறது. மக்களோ கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வது மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். ஆகவே, அதிகாரத்தை வலிமையாக்கினால் இந்தியாவை எளிதாக ஆட்சி செய்துவிடலாம் என்று கருத்தை முன்மொழிந்தார். குறிப்பாக நிர்வாக முறைகளை சீர் செய்வதற்கு நமக்கு திறமையான அடிமைகள் வேண்டும். அவர்கள் நாம் சொல்வதை அப்படியே செயல்படுத்தும் விசுவாசிகளாக இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ள வேண்டியது கல்வி முறையில் மாற்றம். ஆங்கில கல்வியை அறிமுகம் செய்து வைத்து அந்த கல்வி கற்றவர்களை நாமே வேலைக்கு எடுத்துக் கொண்டால், அவர்கள் நமது விசுவாசிகளாக இருப்பார்கள்.
வெள்ளைக்காரர்களிடம் வேலை பார்ப்பது என்பது கௌரவத்திற்கு உரியது ஒன்றாக நினைக்க கூடியவர்கள் இந்தியர்கள். அந்த பலவீனத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மெக்காலேயின் திட்டம்.
இன்னொரு பக்கம், மெக்காலேயின் அப்பா மேற்கொண்ட வணிக முயற்சிகள் தோல்வி அடைந்து, குடும்பம் கடனில் மூழ்கியது. ஆகவே, இந்தியாவுக்குப் போய்ப் பணியாற்றுவதன் மூலம், தனது சொந்தக் கடனை அடைத்து விட்டு குடும்ப வசதியை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று முடிவு செய்தார் மெக்காலே. இந்தியர்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு அதன் வழி கிடைத்த ஆதாயத்தால் தனது சொந்தக் கடனைத் தீர்த்துக் கொண்டார் மெக்காலே. 12,000 பவுண்ட் ஊதியத்துக்காகத்தான் இந்தியக் கல்வி விலைபோனது.
இந்தியக் கலைகளும், அறிவியலும், இலக்கியமும் அர்த்தமற்றவை. அவற்றை மொத்தமாக ஒரு பக்கமும், ஆங்கில இலக்கியத்தில் பிரதானமான 100 புத்தகங்களை ஒரு பக்கமும் வைத்தால், இந்திய இலக்கியங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியாவில் உள்ள எந்த மொழியும் கல்வி கற்றுத்தருவதற்கு தகுதியானவை இல்லை. ஆங்கிலம் ஒன்றுக்குத்தான் கல்வி கற்றுத்தரும் முழுமையான தகுதி இருக்கிறது. இலக்கியப் பாரம்பரியம் இருக்கிறது. ஆகவே, இந்தியா முழுமைக்கும் ஆங்கிலக் கல்வியை உடனடியாக அளிக்க வேண்டியது அவசியம் என்று ஒரு குறிப்பு அனுப்பினார் மெக்காலே.
’’நான் கிறிஸ்தவனாக பிறந்தபோதும் நடுநிலையான ஒருவராக செயல்படுகிறேன்’’ என்று அறிவித்துக் கொண்ட மெக்காலே, தனது நடுநிலைமையின் சாட்சியாகச் செய்த காரியம் என்ன தெரியுமா?. அதுவரை இயங்கி வந்த அரபு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகளை மூடிவிடும்படி உத்தரவிட்டதுதான். கல்கத்தாவில் இயங்கி வந்த மதரஸாவுக்கும், சமஸ்கிருதக் கல்வி நிலையத்துக்கும் அளிக்கப்பட்ட மானியம் உடனே நிறுத்தப்பட்டது. அதுதான் அவரது பாஷையில் நடுநிலையாம்!
இந்திய மக்களின் மூடத்தனத்துக்கு, அவர்களின் மதமே முக்கிய காரணம். ஆகவே, அதில் இருந்து விடுபடுவதற்கு கிறிஸ்தவ மதப் பிரசாரம் இன்றியமையாதது என்று வெளிப்படையாகச் சொன்னவர்தான் மெக்காலே.அவரது கருத்தை பிரிட்டீஷ் அரசும் ஆதரித்தது!
இந்திய மக்களில் மிகுந்த அறிவுத் திறமை கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.வானவியல், அடிப்படை அறிவியல், கணிதம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு தனித்திறன் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நமது கல்விமுறைக்குள் கொண்டுவர வேண்டும். ஆங்கிலக் கல்வி இல்லாத இந்தியர்களின் அறிவு பலவீனமானதே. அதைத் திருத்தி அவர்களை ஆங்கிலம் கற்ற இந்தியர்களாக உருவாக்குவதே தனது வேலை’’ என்று மெக்காலே தனது கல்வி கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார்.
1834-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள், அவர் பேசிய சொற்பொழிவு முக்கியமானது. அரசு அதிகாரத்தில் இந்தியர்களுக்குப் பங்கு வேண்டும் என்றால், அவர்கள் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் படித்தே ஆக வேண்டும். இந்தியா தன்னைத்தானே ஆண்டுக் கொள்ளும் திறமை அற்றது. அதை நிர்வாகம் செய்ய பிரிட்டீஷ் அரசு மட்டுமே தகுதியானது. நிர்வாகவியல், ராணுவம், அரசுத்துறை போன்றவற்றில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களை நாம் தயார்படுத்த வேண்டும் என்றார். இந்த ஆணவக் குரலுக்கான எதிர்ப்பு இந்தியப் பத்திரிக்கைகளில் உடனே வெளிப்பட்டது. மறு நிமிடமே, இந்தியப் பத்திரிக்களை மெக்காலே வசைபாடினார்.
உலக வரலாற்றிலேயே இந்தியாவில்தான் அதன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் எனப்படும் ஐபிசியையும், இந்தியக் கல்வி முறையையும் ஒரே நபர் உருவாக்கி இருக்கிறார். ஆம், நண்பர்களே..மெக்காலேதான் இந்தியாவில் தண்டனை முறையையும், கல்வி முறையும் உருவாக்கியவர். ஒரு வேளை இரண்டும் ஒன்றுதான் என்று அன்றே முடிவு செய்துவிட்டாரோ என்னவோ?
எனவே, இந்தியக் கல்விக் கூடங்களை தண்டனைக் கூடமாக்கிய பெருமை மெக்காலேயைத்தான் சாரும். 1835 பிப்ரவரி 2ம் தேதி அவர் தனது கல்விக் கொள்கையை சமர்ப்பித்தார். இனி இந்தியர்களின் தாய்மொழியாக ஆங்கிலம் உருவாகிவிடும் என்று மெக்காலே அன்று பேசிய பேச்சு இன்று நடைமுறையாகிவிட்டது.
இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதற்காக இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்திய ஆங்கிலம் என்ற தனிவகையே அப்படித்தான் உருவானது. ஆங்கிலத்தை உச்சரிப்பதில் இந்தியர்களுக்கு உள்ள பிரச்னையை வெள்ளைக்காரர்கள் கேலி செய்து சந்தோஷப்பட்டார்கள். ஆங்கிலப்புலமை கொண்ட உயர்தட்டு இந்தியர்கள், தாங்களும் இங்கிலாந்துவாசிகளுக்கு சமம் என்று ;அண்டனுக்கு படிக்கப் போனார்கள். ஐசிஎஸ் பட்டம் பெற்றார்கள். அதிகாரிகளாகப் பதவியேற்று, சொந்த மக்களையே துன்புறுத்தத் தொடங்கினார்கள். அவர்களின் ஒரே சொத்து ஆங்கிலம்தான். இந்தியச் சமூகம், தனது சொந்த மொழியைப் புறக்கணித்த வரலாறு அப்படித்தான் தொடங்கியது.
மெக்காலே சொன்னதுபோல பண்டைய இந்தியாவில் கல்வி மோசமாக இருந்ததா? அறிவியலும் இலக்கியமும் முறையாகக் கற்பிக்கப்படவில்லையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்திருந்தால் இந்தியாவில் யாரும் கல்வி கற்றிருக்கவே முடியாது என்று சிலர் பேசிக் கொள்வதும், அதற்கு சிலர் எதிர்ப்பு கொடுத்து பழங்காலத்தில் இந்தியாவில் இருந்த கல்வியை பார் என்று எடுத்து கூறுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்தியாவின் பழங்கால கல்வி நிலை குறித்து அடுத்த செய்தியில் காண்போம்.