பண்டைய வரலாறு : நடுநிலை.காம் - வரலாறு பகுதி - 1

History news

பண்டைய வரலாறு : நடுநிலை.காம் - வரலாறு பகுதி - 1

நமது நடுநிலை.காம் -யின் வரலாறு பகுதியில் இன்று(3.08.2024)முதல் வரலாறு செய்திகளை தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளோம். அதன்படி இன்று பண்டைய வரலாறு என்கிற தலைப்பில் தொடங்கியிருக்கிறோம். இது சகலவிதமான நூல்களில் இருந்து சேகரித்தது ஆகும்.  

உண்மை கதை 

வரலாறு என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியது. சிறந்த மனிதர்களின் வாழ்க்கை பற்றியது. அவர்களில் சிலர் அரசர்களாக இருந்து குடிமக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் அல்லது அவர்களைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாபெரும் வீரர்கள் பல போர்க்களங்களில் தங்கள் வீரத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களில் சிலர் மகான்களாக, அறிஞர்களாக இருந்து சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியது உண்டு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மக்களிப் வாழ்க்கை முறை, நாகரிகம் இவற்றை நாம் அறிந்து கொள்ள வரலாறு உதவுகிறது. வரலாறு என்பது ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டவை, இந்திய வரலாறு இந்தியர்களின் ஆவணம். வரலாறு மன்னர்களைப் பற்றி மட்டுமா பேசுகிறது. சாதாரண மக்களைப் பற்றியுந்தான் பேசுகிறது. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், தங்களுடைய உணவை எப்படிப் பெற்றார்கள், தங்களுடைய நகரங்களையும், ஊர்களையும் எப்படி நிர்மாணித்தார்கள் என்பது நமக்கு விவரிப்பது வரலாறு. 

இசை, ஓவியம் போன்ற கலைகள் எப்படி வளர்ச்சியுற்றன என்பதையும், வாழ்விற்கான கோட்பாடுகள் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டன. பண்பாடுகள் எப்படிக் காப்பாற்றப்பட்டன என்பதையும் வரலாறு விவரிக்கிறது. வரலாறு என்பது சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாக இருந்தாலும் அவை கதைகள் அல்ல அவை நிஜங்கள். உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களைப்பற்றிய விபரங்கள் இன்று  எப்படி நமக்குக் கிடைத்தன. அப்போது காகிதங்கள் இருந்ததில்லை, அச்சு எந்திரங்கள் இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் பனை ஓலைகளில், கற்பலகைகளில், மிருகங்களின் தோல்களில் எழுத்தாணிபோன்ற கூரிய கருவிகளைக் கொண்டு எழுதி வைத்தார்கள், சித்திரங்களாய் வரைந்தார்கள், சிற்பங்களாய் செதுக்கி வைத்தார்கள். எப்போதோ புதையுண்ட நகரங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்து, பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய பானைகள், தட்டுகள், கருவிகள், ஆயுதங்கள் இவற்றை ஆராய்ந்து அவர்களுடைய வாழ்க்கைமுறையை விவரித்திருக்கிறார்கள். பல்வேறு காலக்கட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டே அவர்களுடைய அறிவு வளர்ச்சியை, நாகரிகத்தை நாம் அறிய முடிகிறது. 

எடுத்துக்காட்டாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கற்களாலான கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை அவை படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். கற்களோடு கற்களை உரசி பல கூரிய ஆயுதங்களை, கருவிகளை அவர்கள் செய்திருந்தனர். 

அவர்கள் ஏன் கற்களைத் தேர்ந்தெடுத்தது? தங்கள் விருப்பத்திற்கேற்ப அவற்றை உடைத்து ஊர்மை செய்து கொள்ள முடிந்தது. அவற்றைக் கொண்டு வெட்டவும், பிளக்கவும், அரைக்கவும், உரசிக் தேய்க்கவும் செய்தார்கள். கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களை நாம் பழைய கற்கால மனிதர்கள் என்கிறோம். அவர்கள் தனித்து வாழ்ந்தார்கள்.கிடைத்ததை உண்டார்கள். பிறகுதான் வேட்டையாடவும், கூட்டமாக வாழவும் கற்றது, சேர்ந்து வாழத்தலைப்பட்ட மனிதன் குகையைவிட்டு வெளியே வந்தான். 

சிறிய ஊர்களை உருவாக்கினான்.சேற்றாலும், கற்களாலும் வீடுகட்டி வசிக்கலானான். இவர்களை புதிய கற்கால மனிதர்கள் என்று நாம் குறிப்பிடுகிறோம்.  

(தொடரும்)