தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை.!

sterlite news

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை.!

கொடியங்குளம் உள்ளிட்ட தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலவரங்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லையென்பதே காரணம் என்று ஓய்வு பெற்ற நீதிபதி  ரத்தினவேல்பாண்டியன் கமிஷன் அறிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் தொழிற்சாலை வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சியினர் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் இந்த ஆலை வருவதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே காரணம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.   அப்போது இந்த ஆலையை வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலையாக மட்டுமே பார்த்ததால் கொண்டு வந்தவர்கள் பெருமையாக பேசிக் கொண்ட வரலாறும் உண்டு. 

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடிக்கு வந்த பிறகு தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதியில் உயர்ந்த இடத்தை பிடித்தது. தூத்துக்குடியை தாண்டி தமிழக பொருளாதார குறியீட்டில் முக்கிய இடத்தில் இருந்தது இந்த ஆலை. சாதாரண தெருவோர ஹோட்டல் முதல் லாரி சர்வீஸ் வரை பரபரப்பாக இருந்தது தூத்துக்குடி. தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் நடத்துவதற்கு ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி வந்தனர் என்பதை மறுக்க முடியாது. பல்வேறு வகையில் மக்களுக்கு உதவிய வந்த அந்த ஆலையையும் அரசியல் வளைத்தது. நாடாளுமன்ற தேர்தல் வர இருந்த நேரத்தில் கூட்டத்தை ஒருங்கிணைக்க கிடைத்த கரு வாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகம் பயன்பட்டது. அதன் விளைவு 13 பேர் உயிர் போனது. ஆலை மூடப்பட்டது. எல்லாமே முடங்கி போனது. 2018ம் ஆண்டுமுதல் இதுவரை ஆலை மூடிக்கிடக்கிறது. இப்போதுதான் அந்த  ஆலை இல்லாததின் அருமை பேசப்பட்டு வருகிறது. கொடூரமான ஆலை என்பதுபோல் சித்தரித்ததினால் யாரும் அதை ஆதரித்து பேசமுடியாத அளவிற்கு மக்கள் மனநிலை மாறி போயிருந்தது. இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தின் தொழில் அவசியத்தை பலரும் யோசித்து பார்க்கின்றனர். மாசு ஏற்படாத வகையில் தொழிற்சாலையை கண்காணிப்பதைவிட்டுவிட்டு நிறுத்தி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது.       

இந்தநிலையில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க வேண்டும் என தூத்துக்குடி எம்.பியான கனிமொழியிடம் அவரது அலுவலகத்தில் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தியாகராஜன் என்பவர் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார். அப்போது அமைச்சர்கள் அனிதாராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அவர் கொடுத்துள்ள மனுவில், தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நம்பி மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மேலும் 64 ஒப்பந்ததாரர்களும், அவர்களை நம்பி சுமார் 3500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றினர். இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு, இந்த ஆலையே முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது.

இந்த ஆலையை நம்பி கனரக வாகனங்கள் வாங்கி தொழில் செய்து வந்தோம். திடீரென இந்த ஆலை மூடப்பட்டதால் வாகனக் கடனை கடனை செலுத்த முடியாமல், பலர் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொழில் செய்து வந்தோம். இந்த ஆலையால் கேன்சர் நோய் வருகிறது என்று திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் பிரசாரம் காரணமாக, அது பேசும்பொருளாகிவிட்டது. ஆனால்,  இந்த ஆலையே வாழ்வாதாரமாக மாறிப்போன எங்களில் யாருக்கும் கேன்சர் நோய் இல்லை. மேலும், ஆலைக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கும் இந்த நோய் வரவில்லை. அதேப்போன்று எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. இந்தியா ஸ்டெர்லைட் ஆலை காப்பர் உற்பத்தி செய்த பிறகு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு முன்னேறியது. இந்திய வளர்ச்சியை விரும்பாத சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால், இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அதையே காரணமாக காட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கொரோனா இரண்டாவது அலைக்கு பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது கூட, ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரித்து, உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் தமிழகம் முழுவதும் சுமார் 2266 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இலவசமாக விநியோகித்தது. இதன் மூலம் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இதனால் வேலையில்லாமல் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர். ஆனால், அதுவும் ஒரு தற்காலிக நிகழ்வாக முடிந்து போனது.

தற்போது, நீண்ட காலமாக ஆலை மூடிக்கிடப்பதால் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துள்ள இந்த ஆலை நிர்வாகம், தங்களது சமுதாய வளர்ச்சி பணிகளை கைவிடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10,500 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். 586 தொழிலாளர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொடுத்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் படுக்கையும் மருத்துவ உபகரணங்களும் இலவசமாக வழங்கியுள்ளனர். ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு வழங்கி வந்த குடிநீர் சப்ளையை இதுவரை நிறுத்தவில்லை. திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் கிராமப்புற இளைஞர்கள் 700 பயனடைந்துள்ளனர். கிராமங்களில் திருமணம் செய்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழக்கம்போல வழங்கப்பட்டே வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தி இலவச சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாததனால் குடிபழக்கம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இந்த ஆலையை நம்பியிருந்த சுமார் 3500 தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசவும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அவசியமாகும். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி பணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில்  குறிப்பிட பட்டிருந்தது. 

தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி இது குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேசி, ஆலையை திறப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாகும்.