நீங்கள் விரும்பும் வாழ்க்கைக்கு நீங்கள் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்களா?

news news

நீங்கள் விரும்பும் வாழ்க்கைக்கு நீங்கள் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்களா?

நீங்கள் விரும்பும் வாழ்க்கைக்கு நீங்கள் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்களா என்பதைப் பார்க்கவும் உங்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஒரு சோதனை. நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்காக உழைப்பாளி பாமர மக்களாகிய நாம் நாள்தோறும் கடினமாக உழைத்துக் கொண்டே மற்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் மக்கள் கடினமாக உழைப்பதற்குப் பதிலாக அதிகமாகச் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

அந்தச் சிந்தனைகளின் மூலம் அவர்கள் முன்னேறிச் செல்லுகிறார்கள் மற்றும் அவர்கள் ஒரு ஊதியத்தைக் கொடுத்து நம்மிடம் உழைப்பைக் காலம் காலமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்; அந்த உழைப்பிற்கான ஊதியம் குறைவாக இருந்தாலும்கூட நம்முடைய உழைப்பை நாம் அதிகமாகத் தான் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உணவு, உடை மற்றும் இருப்பிடம் என வாழ்வதற்கு உழைப்பு எப்படி முக்கியமோ அதுபோல நம் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல சிந்தனைகளும் மிக முக்கியம். குடும்ப வாழ்க்கையில் நாம் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறோமோ அதன் பின்னர்தான் நாம் சமூக அல்லது பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும். 

நாம் நம்முடைய உடல் உழைப்பினால் பெற்ற ஊதியத்தின் மூலம் குடும்பத்தினருக்குத் தேவையானப் பொருட்களை அல்லது விஷயங்களை நாம் செய்துத் தருகிறோம் மற்றும் அவர்களைப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி நாம் யாரும் சரியாகச் சிந்திப்பது கிடையாது. பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள குடும்பத்தில் அப்பா, அம்மா அல்லது மாமா, அத்தைப் போன்றோர் மகன் அல்லது மகள் மற்றும் மருமகள் அல்லது மருமகன் முன்னேறிச் செல்ல நல்லச் சிந்தனைகளை வழங்குவார்கள்; ஒரு அரசியல்வாதியின் குடும்பத்திலும் தான் சேர்த்து வைத்தச் சொத்துக்களைப் பல மடங்கு பெருக்க மற்றும் அவர்களுக்கு அடுத்ததாக அதிகாரத்துக்கு வர மகன் அல்லது மகளுக்கு மற்றும் மருமகன் அல்லது மருமகளுக்கு அறிவுரை வழங்குவார்கள். 

ஆனால், ஏழைப் பாமர உழைப்பாளி வீட்டில் மகன் அல்லது மகளாக இருக்கும் நாம்தான் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை நம்முடன் முன்னேற்றிச் செல்ல வேண்டும். கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்காகக் குறைந்தது ஒரு மணிநேரமாவது தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கியாக வேண்டும்; கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மனம்விட்டு வெளிப்படையாகப் பேசினால்தான் கவலைகள் மற்றும் பிரச்சினைகளைக் களைந்து முன்னேறிச் செல்லவும் மற்றும் நல்லச் சிந்தனைகளையும் செய்ய முடியும். தினம்தோறும் நமக்கு மற்றும் நம் வீட்டில் நிலவக் கூடிய பிரச்சினைகளுக்கானத் தீர்வுகளைக் காண முதலில் சிந்தனைகளைச் செய்ய வேண்டும். அதை அவ்வப்போது தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துவிட்டு, பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் வழிகளைச் சிந்தித்து, பின்னர் அதற்கானப் பாதைகளைத் தேர்ந்தெடுத்து அதிலே நாம் பயணிக்க வேண்டும். நாம் செல்லும் பாதைகள் கரடுமுரடானது மற்றும் குழப்பங்கள் நிறைந்தது. 

அவ்வப்போது ஏற்படும் தடைகள், சிக்கல்கள், போராட்டங்கள் மற்றும் வலிகளினால் நம்முடைய மனம் மாறலாம்; பலப் பாமர உழைப்பாளி மக்கள் சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சி பின்வாங்கியிருக்கிறார்கள் அல்லது திசை மாறியிருக்கிறார்கள். இதனால் பலர் தங்களுடையக் கனவுகளையும் மற்றும் உழைப்பையும் தொலைத்து பின்னேறியிருக்கிறார்கள்; நாம் இங்கு நல்ல பாதையில் முன்னேறிச் செல்வதைத் தவிர வேறு எந்த ஒரு சிந்தனையும் இருக்கக் கூடாது. நாம் சூழ்நிலைகளைக்கேற்ப வாழாமல் சிந்தனைகளுக்கேற்ப போராடி முன்னேறிச் செல்வதே வாழ்வில் நம்மை உயர்த்தும். வாழ்வில் எந்தத் துன்பங்கள் வந்தாலும் அல்லது ஒரு ஒட்டுமொத்த அரசாங்கமும் நம்மை எதிர்த்தாலும் அல்லது கொடிய நோய்கள் நம்மைச் சூழ்ந்தாலும் கூட போராடும் மனவலிமையை வளர்த்துக் கொண்டு கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நேசிப்பது மட்டுமல்லாமல் நல்ல ஒரு உற்சாகத்துடன் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதைக் கற்றுக் கொள்ள  வேண்டும். வறுமையைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்வதைப் பற்றிச் சிந்தித்து வாழ்வதே நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஒவ்வொருக்கும் தன்மீது அல்லது பெற்றோர்களின்மீது அல்லது குழந்தைகளின்மீது அல்லது கடவுளின்மீது அல்லது உழைப்பின்மீது அல்லது தொழிலின்மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதைவிட அதிகமாக நம்முடைய முன்னேற்றத்தின் மீதும் மற்றும் இலட்சியத்தின்மீதும் நாம் நம்பிக்கை வைத்தாக வேண்டும். மன்னர்கள் காலத்தில் இளவரசர் மற்றும் இளவரசிகளைப் போருக்கும், பலக் கலைகளைக் கற்றுக் கொள்வதற்காகவும் மற்றும் மக்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுடன் சேர்ந்து சிலகாலம் வாழவும் வழியனுப்பி வைப்பார்கள். அதில் நிச்சயம் மக்களுக்கான தியாகமும் மற்றும் அர்ப்பணிப்பும் இருக்கும்; அதைப் போல நாம் செய்யும் காரியம் அல்லது பணி அல்லது முயற்சி அல்லது சிந்தனைகளில் எந்த அளவிற்கு உண்மைகள் மற்றும் நல்லவைகள் இருக்கிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். 

அர்ப்பணிப்பு என்பது கடமை அல்லது முயற்சி அல்லது வாழ்க்கை நெறி அல்லது சிந்தனைகளில் இருந்து ஒருபோதும் வலுவாமல் அல்லது பின்வாங்காமல் இருப்பது. இறுதியாக, நம்முடைய ஒவ்வொருப் போராட்டங்களும் நம்முடைய வலிமையை அல்லது ஆற்றலை அறிந்து கொள்ளும் ஒரு சோதனை மட்டுமல்ல; அது நம்முடைய நல்ல சிந்தனைகள் மற்றும் நல்ல இலக்குகளை அடைய நல்ல ஒரு ஊன்றுகோலாகவும் மற்றும் நல்ல வாழ்வியல் பாடங்களைக் கற்றுத் தரும் அறிவாகவும் நிச்சயமாக இருக்கும்! போராடி வாழ்வதைப் போல பல மடங்கு அதிகமாக நாம் சிந்தித்து வாழ்ந்தால் நாம் நிச்சயமாகப் பலச் சோதனைகளைக் கடந்து வெற்றி பெறுவோம்! சிந்தித்து நல்ல சிந்தனைகளுக்கேற்ப வாழுங்கள்! நண்பர்களே...

-கோவை வேல்மணி முருகன்