வாக்களிக்க வரும் பிரபலங்கள், தலைவர்களிடம் பேட்டி எடுத்து உடனே வெளியிட தடைவிதிக்க வேண்டும் - அவசர கோரிக்கை
election news
இந்திய பெரு நாட்டில் 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை முறையாக வழிநடத்தவே மக்களால் உருவாக்கப்படுகிறது அரசு நிர்வாகம். அந்த அரசு நிர்வாகத்தை உருவாக்க நடத்தப்படுகிறது ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தல். இந்த தேர்தல் முறையாக நடத்தப்படவேண்டும். அதன் மூலம் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் தேர்தல் விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த வகையில் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கான கால நேரம், தேர்தல் நடைபெறும்போது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை ஆணையம் கூறுகிறது.
தேர்தல் நடைபெறும் இரண்டு தினங்களுக்கு முன்னரே பிரசாரத்தை முடித்துக் கொள்ள விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் நல்ல விசயம்தான். இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு இந்தியனாக நமக்கு பெருமையாக இருக்கிறது. அதேவேளை, தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே ஓட்டுப்போட வரும் தலைவர்கள், ஓட்டுப்போட்டுவிட்டு வெளியேறும் தலைவர்களிடம் பத்திரிக்கை, மீடியாவை சேர்ந்தவர்கள் பேட்டியெடுக்கின்றனர். அதுவும் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. ஓட்டுப்போட வந்து செல்லும் தலைவர்கள் அவர்கள் விரும்பும் கட்சியை ஆதரிக்கும் வகையில்தான் மறைமுகமாக பேட்டி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை அனுமதிக்கும்போது அவர்களின் குரல் தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களை திசை திருப்பும் நிலை ஏற்படலாம். இது 140 கோடி மக்களின் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை தகர்க்கும் செயலாகத்தான் இருக்க முடியும். எனவே வாக்களிக்க வரும் யாரிடமும் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் அவசர உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
வந்து செல்லும் தலைவர்களை போட்டோ எடுத்து போடட்டும். அவர்களிடம் பேட்டியெடுத்து போடுவது அவசியம் இல்லாதது. வரும் அனைவரும் பொதுவான கருத்தை மட்டுமே கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே வாக்களிக்க வருவோரிடம் பேட்டியெடுத்து வாக்குப்பதிவு நடந்துவரும்போதே வெளியிட கூடாது என்கிற உத்தரவை தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். இது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல இனிவரும் எல்லா காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.