தமிழகத்தில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு - ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அமைச்சர் வாய்ப்பு
TN NEWS
தமிழக சட்டப்பேரவையில் புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சமூகங்கள் மற்றும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் விஜய் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில் தவெக, காங்கிரஸ் கட்சிகள் கலந்த அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின் மூலம் அமைச்சர்களுக்கான துறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைச்சரவை பட்டியலில், பட்டியலின மக்களுக்கு 7 அமைச்சர்பதவிகள் வழங்கப்பட்டிருப்பது சமூகநீதியை முன்னிறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், தென் தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுக்கும் இந்த முறை முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் தனித் தொகுதிக்கு முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவை சேர்ந்த மதன்ராஜா, சிறுகுறு தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அமைச்சர் பதவி கிடைக்காத தொகுதியாக கருதப்பட்ட ஓட்டப்பிடாரத்திற்கு இந்த முறை அமைச்சரவை வாய்ப்பு கிடைத்திருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறுகுறு தொழில் துறை, தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம், புதியம்புத்தூர் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் தொழில், உப்பு உற்பத்தி, சிறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்கள், கிராம தொழில்கள் மற்றும் பெண்கள் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி மையங்கள் அதிகளவில் உள்ளன. இத்துறைகளுக்கு அரசின் கூடுதல் நிதி மற்றும் திட்டங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
“எங்கள் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு இதுவரை அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தற்போது எங்கள் பகுதியைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் சாலை, குடிநீர், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் வேகமாக நடைமுறைக்கு வரும்,” என்று அப்பகுதி மக்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைப்பு சமூக பிரதிநிதித்துவத்தையும், பிராந்திய சமநிலையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
nadunilai.com