''எந்த தேர்வை வைத்தாலும் அதில் வெற்றி பெற்றுக் காட்ட கூடியவர்கள் தமிழர்கள்'' - நீட் உண்ணாவிரதத்தில் கனிமொழி எம்.பி

NEET -DMK

''எந்த தேர்வை வைத்தாலும் அதில் வெற்றி பெற்றுக் காட்ட கூடியவர்கள் தமிழர்கள்'' - நீட் உண்ணாவிரதத்தில் கனிமொழி எம்.பி

எந்த தேர்வை வைத்தாலும் அதில் வெற்றி பெற்றுக் காட்ட கூடியவர்கள் தமிழர்கள் என்று தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின்போது கனிமொழி எம்.பி பேசினார்.   

தமிழகம் முழுவதும் இன்று(20.8.2023)திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் திமுகவினரோடுஅமைச்சர்கள் மற்றும் எம்.பி உள்பட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதாராதாகிருஷ்ணன், எம்.பியான கனிமொழி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். 

உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கனிமொழி எம்.பி பேசினார். அப்போது அவர், ’’நீட் தேர்வை திமுக எப்போதும் எதிர்த்து வருகிறது. தலைவர் கலைஞர், அண்ணன் மு.க.ஸ்டாலின் ஆட்சிகளில் நீட் தேர்வு தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உதயநிதிஸ்டாலின் முயற்சியால் இளைஞரணி சார்பில் அதே நீட் தேர்விற்கு எதிர்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த போராட்டம், இளைஞரணி மற்றும் மருத்துவ அணி போராட்டமாக நடந்து வருகிறது. இந்த போராட்டம் மாணவர்கள் மற்றும் மக்கள் எழுச்சி போராட்டமாக மாறவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமாகும். 

நீட் தேர்வை நான் எதற்காக வேண்டாம் என்று சொல்லுகிறோம் என்பதற்கு காரணம் என்னவென்றால் நாம் கொஞ்சம் சரித்திரத்தை திருப்பி பார்க்க வேண்டும். சமஸ்கிருதம் படித்திருந்தால் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்கிற நிலை ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்தது.  அதனை மாற்றியது திராவிட இயக்க ஆட்சி. சமஸ்கிருந்தம் படித்திருந்தால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும்  என்கிற நிலை எதற்காக வைக்கப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் சிலருக்கு இருக்கிறது. அதை படிக்கவில்லையே என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூட வருத்தப்பட்டார். அதை தெரிந்திருந்தும் அப்படி சொன்னார். நமக்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கிற சிந்தனையும் கிடையாது அதை சொல்லித்தரவும் யாரும் கிடையாது. 

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்கிற நடைமுறையே முன்னேறியவர்களாக தங்களை கருதிக் கொள்வோருக்கு வசதியாக வைத்திருந்தார்கள். அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும். இப்போது மறுபடியும் அதேபோல் ஒரு தடையை ஏற்படுத்த நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர்.  ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்காக கலைஞர் அரசு சார்பில் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தார். அதில் அனைத்து ஏழை, எளிய மாணவர்கள் படித்து வந்தார்கள். இது நிறையபேர் கண்ணை உருத்த கூடியதாக மாறியது. நானும் நீயும் ஒண்ணா என்கிற கேள்வி கேட்கும் நோக்கத்துடன் இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்க கூடிய மாநிலத்திலும் அதை கொண்டு வந்து தமிழ் மாணவர்களுக்கு இடமில்லை என்று சொல்ல கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். அதான் நீட் தேர்வில் நம்பிள்ளைகள் நிறையபேர் பாஸ் ஆகிறார்களே. அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலபேர் கேட்கலாம். எந்த தேர்வு வைத்தாலும் வெற்றி பெற்றுக் காட்ட கூடியவர்கள் தமிழர்கள். அதனால் நீங்கள் எந்த தடை கொண்டு வந்தாலும் எங்களால் அதை தாண்டி காட்ட முடியும். ஆனால் அந்த தடையை உருவாக்குவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்பதற்குதான் இந்த போராட்டம்’’ என்றார்.