சனாதனம் குறித்து அமைச்சரா பேசவில்லையாம், தனிமனிதனாக பேசினாராம் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

MInister Udhayanithi

சனாதனம் குறித்து அமைச்சரா பேசவில்லையாம், தனிமனிதனாக பேசினாராம் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை கொசு,டெங்கு,மலேரியா,கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதனால் இந்தியா முழுவதும் அமைச்சர்களுக்கு எதிராகவும், திமுகவிற்கு எதிராகவும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் உதயநிதி மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட மத உணர்வை கொச்சைப்படுத்திவிட்டார். இதனால் மனது புண்பட்டுவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை இன்று 16.10.2023 நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயநிதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைச்சட்டத்துக்கு விரோதமானதா? என்று கேள்வி கேட்டதுடன், தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது. தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு அல்லது வேறு எந்த சட்டத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறையான்மைக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை’ என்று கூறப்பட்டது. 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதில் நம்முடைய கருத்து என்ன? : சனாதனத்தை ஒழிக்க வேண்டு கூறியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். எந்த ஒரு மதம் சம்பந்தபட்ட விவகாரங்களையும் அம்மத மக்கள் மனம் புண்படும் வகையில் பேசக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.  அப்படியானால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது சனாதனப்படி வாழும் மக்கள் மனதை புண்படுத்தியது போல் ஆகாதா என்கிற கேள்வி எழுகிறது. தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்று கூறியிருப்பது வேடிக்கையானது. யார் பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று பார்த்து எந்த வழக்கிலும் முடிவு செய்வதில்லை. அதிலும் இந்து மதம் குறித்த விவகாரம் வீதிக்கு வரும் போது பாஜகவினர் அதில் தலையிடுகிறார்கள் என்பதை எப்படி தவறென்று சொல்ல முடியும்?. 

தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்கிற முறையில் பேசவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. யார் எப்போது தனிப்பட்ட முறையில் பேசுவார்கள்? எப்போது அமைச்சராக இருந்து பேசுவார்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க முடியாது. தனிப்பட்ட மனிதன், அமைச்சர் ஆகும்போது அவர் கூறும் கருத்துக்கள் அமைச்சருடையது என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும்?. பேசியது பொதுமேடை, அமைச்சராகத்தான் அங்கே பேசியிருக்கிறார் என்கிறபோது அதை எப்படி மறுக்க முடியும்?

சனாதனம் பற்றி அரசியலமைப்பு அல்லது வேறு எந்த சட்டத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். சனாதனம் என்கிற வார்த்தை குறிப்பிடப்படாமல் இருக்கலாம். இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் பின்பற்றும் மதம் சனாதனம் அடிப்பையானது. அது குறித்து பேசும்போது அது இந்து என்கிற மதத்தையும்,அந்த மதத்தவரையும்தானே குறிக்கும்?. குறிப்பிட்ட மத உணர்வை கொச்சைப்படுத்துவதும், அவர்களின் மத உணர்வை தூண்டிவிடுவதும் இறையாண்மைக்கு எதிராக அமையும்தானே?. எனவே சனாதன விவகாரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு அளித்துள்ள பதில்கள் அவ்வளவு வலுவான விளக்கமாக தெரியவில்லை என்றுதான் பார்க்க முடிகிறது. வருகிற 31ம் தேதி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?