சொந்த இடத்தில் கூட கொடி ஏற்ற முடியவில்லை - கொதிக்கும் பாஜகவினர்
BJP
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடியேற்றப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. தமிழகம் முழுவதும் கொடியேற்ற வேண்டும் என்கிற மாநில தலைமை உத்தரவின் பேரில் பாஜகவினர் இன்று வட்டார லெவலில் கொடியேற்றினர். பொது இடங்களில் பிரச்னை வருகிறது என்பதற்காக கட்சியினரின் சொந்த இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினர். ஆனாலும் விடுவதாக இல்லை தமிழக காவல்துறை. சொந்த இடங்களில் கொடியேற்றுவதாக இருந்தாலும் அனுமதி வாங்க வேண்டும். அப்படி வாங்காவிட்டால் கொடியேற்றக் கூடாது என்று மிரட்டி வந்த போலீஸ், பல இடங்களில் அனுமதி கொடுத்தாலும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருக்கிறது. ஏற்பாடு செய்தபடி கொடியேற்றிவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அப்படித்தான் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முத்தையாபுரம் தோப்பு தெருவில் பாஜக வை சேர்ந்த ஒருவரின் சொந்த இடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி (01.11.2023) மாலை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி இல்லை என்றும் அனைவரையும் கைது செய்வதாகவும் கூறி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையிலான பாஜகவினரை கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்ராங்கதன், திமுக அரசு அராஜகம் செய்கிறது. சொந்த இடத்தில் கொடி ஏற்றினால் கூட தவறு என்று கைது செய்கிறார்கள். இதற்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்றார்.