அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணத்தை பிடுங்கும் தனியார் பேருந்துகள் - நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
Thoothukudi
அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணத்தை பிடுங்கி வரும் தனியார் பேருந்து நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நட்டாத்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியில் இன்று (1.11.23) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி பரிசுகள் வழங்கி பேசியதாவது :
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், மகளிர் திட்டம் மூலம் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் கடன் உதவி, குமாரபுரம் பரணி மகளிர் சுய உதவிக்கழுவிற்கு பரிசு மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 5 தூய்மை காவலர்களுக்கு பரிசுகள், வேளாண்மை துறை மூலம் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 பேருக்கு மருந்துகள் தோட்டக்கலைத்துறை மூலம் 3 பேருக்கு பழத்தொகுப்பு, காய்கறி விதைத்தொகுப்பு ஆகியவற்றை வழங்கி கிராமசபை போன்ற அமைப்புகள் கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்திலேயே பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை கிராம ஊராட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு தேவையான திட்டங்களை நீங்களே தீட்டி அதனை அரசு திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்வதுதான் கிராம சபையின் நோக்கம். இந்த பகுதியில் இருக்கின்ற அனைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கிராம சபையின் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவை அரசின் மூலம் நிறைவேற்றுவதற்குதான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கல்வியை வளர்ப்பதற்காக 14 வகையான பொருட்கள், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நமது குடும்பத்தில் உள்ள முதல் தலைமுறை பட்டதாரிக்கு தொழிற்கல்வி பயில முழு கல்வி செலவை அரசு ஏற்றுக்கொள்கிறது. கல்விக்காக, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. இந்த திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு துறையில் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது பற்றி இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வருடம் 2023-2024 உங்களுக்கு முக்கிமான வருடம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உங்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதியை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் சரியான தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை என அனைத்து துறை அலுவலர்களும் இங்கு வந்து திட்டங்கள் பற்றி ஆலோசனை வழங்குவார்கள்.
வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேமிக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை குழந்தைகளிடம் தெரிவித்து ஊக்கப்படுத்த வேண்டும். உங்கள் கிராமம் பசுமையான கிராமமாக இருக்க வேண்டும். வருங்கால சந்ததியினரை காப்பதற்கு பசுமை திட்டங்கள் மிகவும் அவசியம். அங்கன்வாடிகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் குளங்கள் என எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் மரக்கன்றுகள் நட வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் எலுமிச்சை, நெல்லி, மா உள்ளிட்ட 5 வகையான மரக்கன்றுகள் தருகிறார்கள். கிராமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்துக்கொடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளில் இருந்து நமக்கு உரங்கள் கிடைக்கும். இதற்கு நீங்கள் அனைவரும் தூய்மை பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் திட்டங்களில் இருந்து அடிப்படை, கட்டமைப்பு வசதிகள், தனிநபர் பயன்பெறும் திட்டங்கள் பற்றி கிராமசபை கூட்டத்தில் பேச வேண்டும். கிராமத்தை முன்னேற்றும் செயல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று பேசினார்.
அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை(பொ) வீரபுத்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நாணயம், ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி, நட்டாத்தி ஊராட்சிமன்றத் தலைவர் சுதாகலா, துணைத்தலைவர் பண்டாரம், ஊராட்சி செயலர் முத்துராஜா உள்பட பலர் அங்கிருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதுபோல் சமூக ஆர்வலரும், போடம்மாள்புரம் திமுக கிளைச்செயலாளருமான ஆர்.திசையநாதன் மனு கொடுத்தார். அந்த மனுவில், ’’தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போவிலிருந்து கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி வழியாக மதுரை வரை தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டது. இது நள்ளிரவில் ஊர் திரும்பும் பேருந்தாகும். வெளியூர் சென்று திரும்பும் ஸ்ரீவைகுண்டம்,சிவகளை, சாயர்புரம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இது,பெரிதும் வசதியாக இருந்தது. இந்த பேருந்து தற்போது வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்களான நாங்கள் வெளியூர் சென்று நள்ளிரவில் வீடு திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளோம்.
இதேபோல் திசையன்விளை டெப்போவை சேர்ந்த உவரி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – குரும்பூர் – ஏரல் – சாயர்புரம் – சாலை - கூட்டாம்புளி - புதுக்கோட்டை - தூத்துக்குடி இடையிலான தடம் எண் 145 எஸ் எஸ் எஸ் என்கிற பேருந்தும் தற்போது வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. மாணவ, மாணவியர் நலனுக்காக இந்த பேருந்தையும் இயக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.
இந்த இரு வழித்தடங்களுக்கும் இரு பேருந்துகளை இயக்குவதற்கு பதிலாக ஒரு பேருந்தை வைத்து இரண்டு வழித்தடங்களிலும் இயக்கலாம். அதாவது தடம் எண் 145 எஸ் எஸ் எஸ் என்கிற பேருந்தை அதன் வழித்தடமான உவரி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – குரும்பூர் – ஏரல் – சாயர்புரம் – சாலை - கூட்டாம்புளி - தூத்துக்குடி வழியாக மதுரை வரை இயக்கலாம் அல்லது உவரி - உடன்குடி - செட்டியாபத்து - மெஞ்ஞானபுரம் - நாசரேத் - ஏரல் - சாயர்புரம் - சாலை - கூட்டாம்புளி - தூத்துக்குடி வழியாக மதுரை வரை இயக்கலாம். இதனை திசையன்விளை, சாத்தான்குளம் அல்லது திருவைகுண்டம் எதாவது ஒரு டெப்போவில் இருந்து இயக்கலாம். இந்த பேருந்தை மதுரைக்கான நள்ளிரவு பேருந்தாகவும், தூத்துக்குடி -சாயர்புரம் - உவரி இடையிலான மாணவ, மாணவியர் மற்றும் பக்தர்களுக்கான பேருந்தாகவும் இயக்கலாம்.
தடம் எண் 145 எஸ் எஸ் எஸ் என்கிற பேருந்தின் கால அட்டவணையின் அடிப்படையில் பேருந்து நாம் கோரிக்கை வைக்கும் வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு 8.45 மணியளவில் வந்து அங்கிருந்து சரியாக 9.00 மணிக்கு கிளம்பி மீண்டும் அதே வழித்தடத்தில் உவரிக்கு சென்று அங்கிருந்து பிற்பகல் 1.00 மணிக்கு கிளம்பி, மீண்டும் அதன் வழித்தடத்தில் ஏரலுக்கு வந்து அங்கிருந்து மாலை 3.15 மணிக்கு கிளம்பி தூத்துக்குடிக்கு மாலை 4.30 மணிக்கு சென்று அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு சென்று அங்கிருந்து இரவு 8.30 அல்லது 9.00 மணியளவில் கிளம்பி தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து சாயர்புரம் வழியாக அதன் வழித்தடத்தில் சென்று டெப்போவை அடையும்படி செய்ய வேண்டும். இதன் மூலம் இரண்டு வழித்தட மக்களின் தேவைகளும் ஒரே பேருந்தின் மூலம் நிறைவேறிவிடும்.
சாயர்புரம் பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சென்று திரும்பும் மாணவ, மாணவியர் போதிய பேருந்து வசதி இல்லாமல் தற்போது கிடைக்கும் பேருந்துகளில் ஏறித் தொங்கிக் கொண்டு செல்கிறார்கள். இந்த பேருந்து இயக்கப்படுமானால் காலையும், மாலையும் மாணவர்கள் மிகவும் பயனடைவர். அதேபோல் நள்ளிரவு பேருந்து வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் இந்த பேருந்து சேவை பயனுள்ளதாக அமையும். எனவே வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டிருந்தது.
திசையன்நாதன் கொடுத்த இன்னொரு மனுவில், ’’தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம் வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர், திருநெல்வேலி,ஒட்டப்பிடாரம் எந்த அளவிற்கு போக்குவரத்து அவசியம் உள்ள வழித்தடமோ? அதுபோல் சாயர்புரம் வழித்தடம் என்று கூறப்படும் திருவைகுண்டம் வழித்தடமும் போக்குவரத்து வசதி அவசியமுள்ள வழித்தடமாகும்.
சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் என்கிற ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் 29 பேருந்து நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனை வரவேற்கும் அதேவேளையில், ஒரே வழித்தட பேருந்துகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்படுவது பயணிகளான எங்களை கஷ்டப்படுத்துகிறது. அதாவது சாயர்புரம் மார்க்க பேருந்துகள் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுவதால் எங்கள் பகுதி பயணிகள் அங்கும், இங்கும் ஓடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். சாயர்புரம் வழியாக ஏரலுக்கு செல்லும் பேருந்துகள் 7வது நிறுத்தத்திலும், சாயர்புரம் வழியாக திருவைகுண்டம் செல்லும் பேருந்துகள் 25வது நிறுத்ததிலும் நிற்கும்படி செய்திருக்கிறார்கள். சாயர்புரம் மார்க்கம் பேருந்துகள் 7வது நிறுத்தத்திலும் நிற்கும், 25வது நிறுத்தத்திலும் நிற்கும் என்கிற போது பயணிகள் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறும் நிலை ஏற்படுள்ளது. சாயர்புரம் பகுதி மக்கள் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி மக்கள் ஏறுவார்கள் என்கிற போது திருச்செந்தூருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிறுத்தம் அருகில் முக்காணி நிறுத்தம் இருப்பதே சரி. அதுபோல் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் புதுக்கோட்டை,வாகைகுளம் செல்லும் மக்கள் ஏறுவார்கள் என்கிற போது திருநெல்வேலி நிறுத்தம் அருகில்தான் வாகைகுளம் வழியாக செல்லும் திருவைகுண்டம் பஸ் நிறுத்தமும் இருக்க வேண்டும். அதேபோல் சாயர்புரம் வழியாக ஏரல், சாயர்புரம் வழியாக திருவைகுண்டம் செல்லும் பேருந்துகள் அருகருகே இருப்பதே நல்லது. எனவே வியாபாரிகள் நலனுக்காக மட்டுமில்லாமல் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தற்போதுள்ள வரிசை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதாவது முதலில், 1) மாநகர பேருந்துகள், 2) புதிய துறைமுகம், புதியதுறைமுகம்(கேம்ப்-1), 3)அனல்மின்நிலையம்(கேம்ப்-2), 4) ஆறுமுகமங்கலம்(கோவங்காடு), 5)திருச்செந்தூர், 6) திருச்செந்தூர், 7) குலசை, 8)சாத்தான்குளம், 9) நாசரேத், 10) குரும்பூர், 11) முக்காணி(ஏரல்), 12) ஏரல்(சாயர்புரம் மார்க்கம்), 13) திருவைகுண்டம்(சாயர்புரம் மார்க்கம்),14)திருவைகுண்டம்(வாகைகுளம் மார்க்கம்), 15)திருநெல்வேலி, 16)திருநெல்வேலி,17)திருநெல்வேலி,18)திருநெல்வேலி,19)மேலச் செக்காரக்குடி, 20) செக்காரக்குடி, 21) வடக்கு சிலுக்கன்பட்டி/பேரூரணி, 22) சொக்கலிங்கபுரம்(தட்டப்பாறை மார்க்கம்), 23) புதியம்புத்தூர் (தட்டப்பாறை மார்க்கம்), 24) கீழ முடிமன்(புதியம்புத்தூர் வழி), 25) வெள்ளாரம்/கவர்னகிரி, 26) ஓட்டப்பிடாரம்(குறுக்குச்சாலை மார்க்கம்), 27) பசுவந்தனை, 28) கீழவைப்பார், 29) குளத்தூர் / சுப்பிரமணியபுரம் என்கிற வரிசைப்படி பேருந்துகள் நிறுத்தங்களை அமைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாயர்புரம் வழித்தட பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியிருந்தார்.
மற்றொரு மனுவில் திசையன்நாதன், ’’தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை, கூட்டாம்புளி,போடம்மாள்புரம்,பேய்குளம்,இருவப்பபுரம்,சாலை வழியாக பெருங்குளம், ஏரல், குரும்பூர் செல்லக் கூடிய பேருந்து டிஎன்69ஏஎப்1155 தூத்துக்குடியில் இருந்து இரவு 10.15 மணி டிரிப் உள்ளிட்ட நேரங்களில் பேருந்தை இயக்கவில்லை. அதேபோல் தடம் எண் 2 ராதா என்கிற பேருந்து திரேஸ்புரம் வரையில் செல்வது கிடையாது. இதனால் காலை தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி, செயிண்ட் மேரீஸ் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு கிளம்பி சிவகளை - சாயர்புரம் வழியாக தூத்துக்குடி செல்ல வேண்டிய லயன் என்கிற தனியார் பேருந்து டிஎன்58ஏஜே11122,சமீபகாலமாக 4.30 மணி டிரிப் இயக்கப்படவில்லை.
இதேபோல் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பலவும் அரசு உத்தரவில்லாமலேயே கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதாவது குறைந்த கட்டணத்தை ரூ.7 என்பதற்கு பதிலாக ரூ.10 என்று உயர்த்திக் கொண்டனர். ஸ்டேஜ்யை கூட்டி காண்பித்து அதிகமாக பணத்தை பிடுங்கி வரும் தனியார் பேருந்துகளை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணத்தை பிடுங்கி வரும் தனியார் பேருந்து நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் பணம் பிடுங்குவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியிருந்தார் திசையநாதன்.