தூத்துக்குடியில் 16வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை 10 ஆயிரம் அபராதம்.!
Thoothukudi
தூத்துக்குடியில் 16வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 16வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஜேசுராஜா மகன் டால்வின் (37) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 03.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று (30.10.2023) டால்வினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் பாதிக்கபட்ட குழந்தைகள் இழப்பீடு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ரேவதி, எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
nadunilai.com