சுத்தம் இல்லாத..சுகாதாரம் இல்லாத சிறு நீர் கழிப்பிடம் - திருச்செந்தூர் கோயில் அருகே அவலம்

Thiruchendur Murugan

சுத்தம் இல்லாத..சுகாதாரம் இல்லாத சிறு நீர் கழிப்பிடம் - திருச்செந்தூர் கோயில் அருகே அவலம்

சுத்தம், சுகாதாரத்தை மக்கள் காப்பாற்ற வேண்டும் என்று அரசுகள் வானத்துக்கும், பூமிக்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் அருகில் கழிப்பிடங்களை முறையாக பராமரிக்காமல் அரசு நிர்வாகமே அலட்சியம் செய்கிறது. 

திருமுருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செவ்வாய், வியாழன், கிருத்திகை,விசாகம்,சஷ்டி,சூரசம்ஹாரம் என்று உலகமே அறியும் வண்ணம் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை முதல் இரவு வரை திறந்திருக்கும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கிறார்கள். கடலில் நீராடி முருகனை தரிசித்து வரும் பக்தர்கள் மன நிறைவோடு வீடுதிரும்பி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை, இக்கோயில் அருகில் உள்ள கழிப்பிடங்கள் சில போதிய பராமரிப்பு வசதி இல்லாமல் துர் நாற்றம் வீசுகிறது. மனநிறைவோடு வீடுதிரும்ப வேண்டிய பக்தர்கள் கழிப்பிடங்களுக்குள் சென்று வெளியே வந்தால் மனநிம்மதியை இழக்கும் நிலை இருக்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள சிறுநீர் கழிப்பறை அதற்கு சாட்சியாகும். 

இந்து கோயில்களை நல்ல முறையில் பராமரிக்கிறோம் என்று வாதிட்டு வரும் அறநிலையத்துறை இதனை ஏப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. புதிய கட்டுமானங்கள் வரவேற்க வேண்டிய நல்ல விசயமாகும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாமல் கழிப்பிடங்களை பார்க்கும்போது குறை சொல்லிதான் ஆகவேண்டியதுள்ளது. இதனை ஒரு தகவலாக எடுத்துக் கொண்டு கழிப்பறைகளை கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும். 

அதுபோல் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட  பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் எடுத்துக் கொண்டு திருப்பதி போன்று ஊரையே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் மற்றும் குலசை முத்தாரம்மன் கோயிலை வைத்துதான் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எல்லையில் உள்ள அங்கு போக்குவரத்து வசதிகள் அதிகம் இருக்கிறது. எனவே இந்த கோயில்களையும், அதனை சுற்றியும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு இந்துசமய அறநிலையத்துறைக்கு இருக்கிறது.