தெய்வீக திருமகனுக்கு ஜெயந்தி விழா - Dr. K. சுதா

Muthuramalinga devar

தெய்வீக திருமகனுக்கு ஜெயந்தி விழா - Dr. K. சுதா

வாழ்வின் இறுதி வரை தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் இரு கண்களாகப் போற்றியவர். தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்ற தாரக மந்திரத்தை வழங்கி, கடைசி வரை அதன் வடிவமாகவே வாழ்ந்தவர். 32 கிராமங்களில் இருந்த சொத்துக்களை, அனைத்து சமுதாய மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல்.

மனிதனாகப் பிறப்பவர்கள் பலர், ஆனால் மனிதனாக வாழ்பவர்கள் சிலர். மனிதனாகப் பிறந்து, மாமனிதனாக வாழ்ந்து அரும் பெரும் பணிகள் ஆட்சி மக்கள் உள்ளங்களில் அமர்ந்திருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.1908 அக்டோபர் 30ல் பிறந்து, 1963 அக்டோபர் 30ல் விண்ணுலக வாழ்க்கைக்கு சென்றவர். பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாளில் வருவது வெகு சிலருக்கு தான்.

முத்துராமலிங்க தேவரின் மந்திரப் பேச்சுக்களில் மயங்கியவர்கள் பலர். 

'எனக்குப் பாய் தான் தெரியும். பட்டு மெத்தை தெரியாது', 'எனக்கு அடக்கம் தெரியும், ஆடம்பரம் தெரியாது, எனக்கு வாழத்தான் தெரியும், வயிறு வளர்க்கத் தெரியாது', 'எனக்கு பாடுபடத்தான் தெரியும், பதவி சுகம் தெரியாது', 'எனக்குப் பாயவும் தெரியும், பதுங்கவும் தெரியும், பயப்படத் தெரியாது, எனக்கு மக்களைத் தான் தெரியும், மந்திரிகளைத் தெரியாது', எனக்கு விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது', 'எனக்கு வெற்றி கொள்ளத் தெரியும். விழா எடுக்கத் தெரியாது, எனக்கு பாசம் கொள்ளத் தெரியும், பகைமை கொள்ளத் தெரியாது, எனக்கு பாராட்டத் தெரியும், பாராட்டு பெறத் தெரியாது'என்ற தன் மந்திர பேச்சின் மூலம் வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொண்டவர்.

வாய்மையும், தூய்மையும் கொண்ட பரிசுத்த அரசியல் வேண்டுமென்றால், அதற்கு தெய்வீக மனப்பான்மை வேண்டுமென குரல் கொடுத்தார். மனித வாழ்க்கையில் வந்தால் போகாதது கீர்த்தியும், அபகீர்த்தியும், போனால் வராதது மரணமும், பிராணமும். வரும் போகும் செல்வமும், தரித்திரமும் என புது புது சித்தாந்தங்களை ஆன்மிகப் பாதையில் காட்டியவர்.மரணத்தை தவிர வேறு எதையுமே தன்னுடையது என்று மனிதன் உரிமை கொண்டாட முடியாது என்று விளக்கிய தேவர் 55 ஆண்டுகளே, இந்த மண்ணில் வாழ்ந்து அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியவர்.

மனிதராய் அவதரித்து தெய்வமாய் அருளைக் கொடுக்கும்  தெய்வீக திருமகனுக்கு ஜெயந்தி விழா எடுப்பதில் தமிழனாய், இந்துவாய்  பெருமிதம் கொள்கிறேன்.

- Dr. K. சுதா, கல்வியாளர்