தூத்துக்குடி வருகை தரும் முதல்வருக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை

High Way News

தூத்துக்குடி வருகை தரும் முதல்வருக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  புதுக்கோட்டையில் மேம்பாலம் கட்டிய பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும்  பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வரமுடியாமல் செல்லும் நிலமை ஏற்பட்டிருக்கிறது. எனவே புதுக்கோட்டை பழைய பாலத்தில் புதிய பாலம் கட்டி அனைத்து பேருந்துகளையும் அந்த வழியாக புதுக்கோட்டை உருக்குள் வந்து செல்லும்படி செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை பகுதியை சுற்றி சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினசரி இந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். எனவே இந்த ஊருக்கு அதிக அளவில் போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் வகையில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை.

தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. ஆனால் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. நெல்லை, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. பகல் ஆனாலும், நள்ளிரவு ஆனாலும் அதே நிலைதான் இருந்து வருகிறது. வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,மாணவ,மாணவியர் என அனைவருமே தேசிய நெடுஞ்சாலையை தாண்டி ஊருக்குள் நடந்து செல்லும் ஆபத்தான நிலையைத்தான் அனுபவித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. போதாதகுறைக்கு இரவு நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் பேருந்துகளும் கூட புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. 

இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகள் சங்கத்தினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வாறு புதிய பாலம் கட்டப்படுமானால் அந்த வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி வழித்தடங்களுக்கு பேருந்துகள் சென்று வர வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். 

இந்தநிலையில் புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம் கட்டுவதே நிரந்தர தீர்வு என்கிற அடிப்படையில் புதுக்கோட்டை பழைய பாலத்தில் புதிய பாலத்தை கட்ட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கூட்டாம்புளியை சேர்ந்த ஆர்.எஸ். சரவணப்பெருமாள் கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தார். அதற்கு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை  துறை சார்பில் அவருக்கு பதில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில், புதுக்கோட்டை பழைய பாலம் கட்டுவதற்கு ரூ9 கோடியே 40 லட்சம் என முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாக கூறப்பட்டிருந்தது. 

பல மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அப்பணி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கபட்டதாக தெரியவில்லை. வழக்கம்போல் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நடுரோட்டில் இறக்கிவிடப்படுகின்றனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை ஒவ்வொரு நாளும் கடந்து வருகின்றனர்.

இதேநிலை நீடித்தால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே அரசு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம்  கட்டும் பணியை விரைந்து துவக்கி, முடிக்க வேண்டும். பாலம் கட்டி முடிக்கும்பட்சத்தில் அந்த வழியாக அனைத்து பேருந்துகளை இயக்க வாய்ப்பு ஏற்படும். இதை கவனிக்காமல் இருந்தால் புதுக்கோட்டை, வாகைக்குளம், முடிவைத்தானேந்தல்,கூட்டுடன்காடு, பேரூரணி, செக்காரக்குடி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், போடம்மாள்புரம், சாயர்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் அதிருப்தியடைவார்கள்.

எனவே தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வருகைதரும் தமிழ்நாடு முதலமைச்சர், இந்த கோரிக்கையை ஏற்று இத்திட்டப்பணியை நிறைவேற்ற உத்தரவிட  வேண்டும் என்று புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்படுமானால் அது, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் பயன்படும் வகையில் அமையக் கூடியதாகும்.

மேலும் இது கோவில்பட்டி - பசுவந்தனை - ஓட்டப்பிடாரம் - புதியம்புத்தூர் - புதுக்கோட்டை - ஏரல் - முக்காணி இடையிலான சாலை என்பது குறிப்பிட தக்கதாகும்.