“ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியாத அரசு, வேலைவாய்ப்பை எப்படி உறுதி செய்யும்?” - சமூக ஆர்வலர்கள் கேள்வி

TNPSC

“ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியாத அரசு, வேலைவாய்ப்பை எப்படி உறுதி செய்யும்?” - சமூக ஆர்வலர்கள் கேள்வி

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான நுழைவாயிலாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள், நேற்று முன் தினம் நடக்க இருந்த குரூப்–2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட கடும் நிர்வாகக் குளறுபடிகளால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்தத் தேர்வுகள், தேர்வு தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாதியிலேயே ரத்து செய்யப்பட்ட சம்பவம், ஆயிரக்கணக்கான தேர்வர்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹால் டிக்கெட் – இருக்கை எண் குளறுபடி

தேர்வு ரத்துக்கான பிரதான காரணமாக, ஹால் டிக்கெட்டில் உள்ள பதிவு எண்களுக்கும், தேர்வு மையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கை எண்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் முரண்பாடே சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள அரும்பாக்கம், நந்தனம், சிஎம்சி கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில், தேர்வர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் குழப்பம் ஏற்பட்டது. 

அரும்பாக்கம் தேர்வு மையத்தில், “உங்களுக்கான இருக்கை நந்தனத்தில் உள்ளது” என கூறி தேர்வர்களை வெளியே அனுப்பியதால், 700-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலைமை மேலும் தீவிரமடைந்தது.

மாநிலம் முழுவதும் தேர்வு ரத்து

சென்னையில் மட்டுமே பிரச்சனை இருந்த போதிலும், அங்கு ஏற்பட்ட குழப்பம் கட்டுக்குள் வராததால், தமிழ்நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதன் காரணமாக, பிற மாவட்டங்களில் தேர்வு அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில், பாதி தேர்வு எழுதிய நிலையில் தேர்வர்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவானது. சில மையங்களில், தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவலே தெரியாமல், தேர்வர்கள் முழு நேரமும் தேர்வு எழுதியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி, அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளன.

“Technical Fault” என தப்பிக்க முயற்சியா?

இந்த சம்பவம் தொடர்பாக, ஆளுங்கட்சியான திமுக அரசு “Technical Fault” என்ற ஒரே வரி விளக்கத்தில் தப்பிக்க முயற்சிப்பதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“TNPSCGroup2 போன்ற அதிமுக்கியமான தேர்வு, தேர்வு நாளன்றே ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை. இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது”
எனக் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.

எதிர்கட்சிகளின் மந்தமான எதிர்வினை

இதேபோன்ற சம்பவம் வேறு ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தால், திமுக இதனை மாபெரும் அரசியல் போராட்டமாக மாற்றியிருக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளாக உள்ள அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்டது, இளைஞர்களை நேரடியாக சந்திக்கவோ, போராட்டங்களை அறிவிக்கவோ தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, “கிட்டத்தட்ட லட்டு போல கிடைத்த அரசியல் வாய்ப்பை அதிமுகவும், தவெகவும் தவறவிட்டுள்ளன”என்பதே. 

தேர்வாணையக் குளறுபடிகள் – ஆட்சி மாற்றத்தின் அரசியல் ஆயுதம்

இந்த சம்பவம், இந்திய அரசியலில் பொதுப்பணித் துறை தேர்வாணையங்கள் (PSC) எவ்வளவு பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான இன்னொரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. தெலங்கானா – TSPSC வினாத்தாள் கசிவு → BRS ஆட்சி வீழ்ச்சி, ராஜஸ்தான் – தொடர் தேர்வு ரத்துகள் → காங்கிரஸ் தோல்வி, மத்தியப் பிரதேசம் – வியாபம் ஊழல் → 2018 ஆட்சி மாற்றம், ஹரியானா – CET குழப்பங்கள் → இளைஞர் கோபம், ஆளுங்கட்சிக்கு பின்னடைவு இந்த மாநிலங்களில், வேலைவாய்ப்பு தேர்வுகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் மையப்புள்ளியாக மாறியுள்ளன.

தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?

தமிழ்நாட்டில் தற்போது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாலும், நிர்வாகத் தோல்வி தெளிவாக வெளிப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் இதனை முறையாக அரசியல் ரீதியாக முன்னெடுத்தால், 2026 தேர்தலை நோக்கி திமுக அரசுக்கு இது கடும் பிரஷராக மாறக்கூடிய சம்பவம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

தேர்வு கால அட்டவணை – தற்போதைய நிலை

முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி, பிப்ரவரி 8 – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (தாள் I), பிப்ரவரி 22 – பொது அறிவுத் தேர்வு (தாள் II) என நடைபெற இருந்த தேர்வுகள், நேற்றைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

இளைஞர்களின் கேள்வி – “நம்பிக்கைக்கு யார் பொறுப்பு?”

பல ஆண்டுகளாக உழைத்து, குடும்பங்களின் கனவுகளை சுமந்து தேர்வெழுதும் இளைஞர்களுக்கு, இந்தச் சம்பவம் நம்பிக்கையின் மீதான மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.“ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியாத அரசு, வேலைவாய்ப்பை எப்படி உறுதி செய்யும்?” என்ற கேள்வி இன்று தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.