மாறுவேடத்தில் வந்த அமைச்சர் ரமேஷ் - மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் கோவில் அர்ச்சர்கள்
Thiruchendur Murugan
திருச்செந்தூர் கோவிலில் பல மணி நேரம் பக்தர்கள் காத்துக்கிடப்பது பெரிய அவதி என்றால் அதைவிட பெரிய அவதி அங்குள்ள அர்ச்சர்கள் படுத்தும்பாடு என்று வழக்கமாக கோவிலுக்கு சென்றுவரும் பக்தர்கள் கூறிவருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் பக்தர்கள் கூட்டம் முழுவதுமாக கோவிலுக்குள் சென்று வரமுடியாமல் வெளியில் நின்றே சுவாமி தரிசனம் செய்துவிட்டு போகும் அளவிற்கு நிலைமை இருக்கிறது என்கிறார்கள். இது குறித்த செய்திகளை சமூக வலைதளங்கள், தினசரி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பார்க்க முடிகிறது.
இந்தநிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். அமைச்சர் என்று படை பட்டாளத்துடன் இல்லாமல் நான்கு பேருடன் சாதாரணமாக டி சர்ட் மற்றும் பேண்ட்டுடன் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தபோது, அவரிடம் ஆளுக்கு ஆயிரம் வீதம் ரூ.4000 கொடுத்தால் உள்ளே அனுப்புகிறோம் என்று சில அர்ச்சகர்கள் பேரம் பேசியிருக்கின்றனர். தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாத அமைச்சர் தனது உதவியாளர் கூகுள் பே மூலம் ரூ.4,000யை அர்ச்சகருக்கு அனுப்பியிருக்கிறார். உடனே உள்ளே செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. அதுவரை தன்னை யார் என்று காண்பிக்காத அமைச்சர், உள்ளே அனுமதிக்கப்பட்டவுடன் தன்னை யார் என்று காண்பித்ததோடு தன்னிடம் பேரம் பேசியவர் மற்றும் அவருக்கு உதவிய காவலர்கள் என மூவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு சென்றிருக்கிறார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல் கோவிலுக்குள் அனுமதிக்க ரூ.4000 வாங்கிவிட்டோமே என்று அர்ச்சகர் திணறியிருக்கிறார். மேலும் அவர்கள் கைப்பட மன்னிப்பு கடிதம் கூட எழுதி கொடுத்தனர். ஆனாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் சம்பந்தபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை அமைச்சர் விரைவுபடுத்தியதின் பேரில் அர்ச்சகர் ஐயப்பன், காவலாளிகள் இருவர் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்துள்ளது. காவலாளிகள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை அர்ச்சகர் கோவில்பணி செய்ய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் நடவடிக்கையின் அளவு அதிகப்படலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சரின் இத்தகைய அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அமைச்சரிடம் பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்னும் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதி தேவைகள் நிறையவே உள்ளது. அதனையும் அமைச்சர் ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் இந்த கோவிலின் நிலங்கள் பல பகுதியில் பரவி கிடக்கிறது. அதனை அனுபவிப்பவர்கள் உரிய தொகை செலுத்துவதில்லை.
மேலும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சி, புதுக்கோட்டை பகுதியில் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து வைத்துள்ளனர். சத்திரம் பகுதி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் என கோவில் நிலங்களை தனிநபர் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் அடிப்படையில் அபகரிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையாத்திரை பக்தர்கள் தங்கி செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
nadunilai.com