அரசியலாகும் ஏரல் வாரச்சந்தை விவகாரம் - திண்டாட்டத்தில் பொதுமக்கள்

Eral News

அரசியலாகும் ஏரல் வாரச்சந்தை விவகாரம் - திண்டாட்டத்தில்  பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்களுக்கு நடுவே பிரபலமான வியாபார ஸ்தலமாக விளங்கி வருகிறது ஏரல். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏரலில் உள்ள கடைகளிலும் திங்கள் கிழமை கூடும் வாரச் சந்தையிலும் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வ வழக்கம். பேரூராட்சி அளவில் உள்ள ஊர் என்பதால் அரசு வரி விகிதம் குறைவு. அதனால் இங்கு வாங்கும் பொருட்களின் விலையும் குறைவாக இருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

திங்கள் கிழமைதோறும் கூடும் சந்தையில் காய்கறி, கருவாடு முதல் பாத்திரம், பண்டம் வரை அனைத்துவகையான பொருட்களும் விற்கப்படுகிறது. ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மற்றும் வருவாய்துறை பகுதியில்தான் இந்த சந்தை இருக்கிறது. அதனால் அந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கை. எனவே அந்த வார்ச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 

இதற்கிடையே, அந்த சந்தையில் கடை வைப்பதற்கு ஏரல் பேரூராட்சி சார்பில் விடப்பட்டுள்ள குத்தகை தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. கடை வைப்போருக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே பேருராட்சிக்கு சொந்தமான வேறு இடத்தில் சந்தையை மாற்றி அங்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் களத்தில் இறங்கினார் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ வான சரவணன்.  பெட்ரோலில் தீப்பற்றுவதுபோல் உடனடியாக திமுக வசம் உள்ள பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகளும், அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பேரூராட்சி அதிகாரிகளும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.  

ஏரல் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் சந்தை வியாபார பெருமக்களுக்கு முக்கிய அறிவிப்பு என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரலில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதில், ஏரல் பேரூராட்சியில் காய்கறி மார்க்கெட் அருகில் நடைபெறும் வாரச்சந்தை 06.07.2026 ம் தேதி முதல் நிர்வாக காரணங்களால் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு பேரூராட்சி நிர்வாகம் - ஏரல் பேரூராட்சி என்று அந்த பிளக்ஸ் போர்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தை வேறு எந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது என்பது குறித்த எந்த தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை.  

இந்தநிலையில், ’’எம்.எல்.ஏ சரவணன் சந்தையை வேறு இடத்திற்கு கொண்டுபோக முயற்சி செய்கிறார்’’ என்கிற தகவல் வேகமாக பரப்பிவிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும்,  பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இன்று சந்தை கூடுவது தடுக்கபட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏ சரவணனுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் ஏரலில் முகாமிட்டு பரபரப்பாக பேட்டியெல்லாம் கொடுத்திருக்கின்றனர். 

இதற்கு நடுவே சந்தைக்கு வந்த எம்.எல்.ஏ சரவணன், சந்தையில் கடை வைப்போரை தடுக்க கூடாது என்றும், அவர்கள் கடை வைப்பதற்கு உதவுவதுமாக இருந்தார். சந்தையை வேறு இடத்திற்கு மாற்றும் வரை வியாபாரிகள் இங்கே இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதனால் சில கடைகள் அங்கு திறக்கப்பட்டிருந்தன. 

இந்த விவகாரம் குறித்து சரவணன் எம்.எல்.ஏவிடம் கேட்டோம், நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்படும் கடைகளால் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதே நல்லது என்று இங்குள்ள பலரும் விரும்புகின்றனர். மேலும் வாரச் சந்தையில் வைக்கப்படும் கடைகளுக்கு வசூலிக்கப்படும் தொகையானது மிகவும் அதிகமாக இருக்கிறது. நடைபாதையில் கடை வைப்போர் சாமான்ய மக்களாகத்தானே இருக்கிறார்கள்?. அவர்களிடம் குத்தகை எடுத்திருப்போர் வாரம்தோறும் ஆயிரக்கணக்கில் வாங்குவதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த வியாபாரிகளுக்கு போபேரூராட்சி சார்பில் போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை. காலையில் இருந்து இரவு வரை வெயிலிலும், மழையிலும் நின்று வியாபாரம் பார்க்கும் வியாபாரிகள் சிறுநீர் கழிக்க கூட போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இதையெல்லாம் செய்து கொடுக்க கேட்டால் எங்களுக்கு எதிராக செயல்பட பார்க்கிறார்கள். திமுகவோடு, அதிமுகவும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபடுகிறது. போக்குவரத்து நெருக்கடி இல்லாமலும், போதிய வசதி வாய்ப்புகளுடனும் சந்தை செயல்பட வேண்டும். அதற்கு தேவையான வேலைகளைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் அதை அரசியலாக்கி சிலர் ஆதாயம் தேட துடிக்கின்றனர். இந்த விவகாரம் மட்டும் இல்லை எந்த விவகாரத்திலும் நாங்கள் நல்லது செய்வதை இவர்கள் யாரும் தடுக்க முடியாது என்றார் வேகமாக. 

மேலும் சிலர், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்துறை இடத்தில் வாரச் சந்தை செயல்படுகிறது. அதில் சுமார் 160 கடைகள் வரை வைக்கப்படுகிறது. திங்கள் கிழமை என்றாலே பஸ்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்ல முடிவதில்லை. போக்குவரத்து நெருக்கடி கடும் பிரச்னையாக இருக்கிறது. சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது சரியான முயற்சிதான். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் சேர்ந்து டெண்டர் எடுத்து வாரச் சந்தையை நடத்துகின்றனர். ஒவ்வொரு கடைக்காரர்களிடமும் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றனர். ஆனால் வியாபாரிகளுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை. அதனால் மாற்றங்கள் செய்வதில் தவறில்லை என்றனர்.   

எந்தவொரு விசயத்திலும் அரசியலை கடந்து பொதுமக்களுக்கு செய்யும் உதவியே சேவையாகும்.!