’’இங்கே உள்ள குளத்தில் எந்த தாமரையும் மலராது’’ - அடித்து சொல்கிறார் கனிமொழி எம்.பி

Thoothukudi smart city

’’இங்கே உள்ள குளத்தில் எந்த தாமரையும் மலராது’’ - அடித்து சொல்கிறார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா என பிரமாண்ட விழாக்கள் இன்று(08.10.2023)நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில் நேற்று பேருந்து நிலைய நுழைவு வாயிலில் ’அண்ணா பேருந்து நிலையம்’ என்று எழுதி வைத்திருக்கும்  போர்டில் பாஜகவை சேர்ந்த சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் ஒட்டினர். அதன் பின்னர் திமுகவினர் சிலர் அதனை கிழித்துவிட்டனர். இதனால் இன்றைய திறப்பு விழா நேற்றே பரபரப்படைந்தது. அதற்குதான் கனிமொழி எம்.பி, இங்கே உள்ள  குளத்தில் எந்த தாமரையும் மலராது என்று பேசியிருக்கிறார். 

இந்த விழாவிற்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். நிதியமைச்சர் தங்கம்தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் வரவேற்றார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேருந்து நிலையம், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

இதில் கனிமொழி எம்பி பேசும்போது, ’’ரயில், பேருந்து, விமானம், கப்பல் என போக்குவரத்து வசதிகள் ஒருங்கிணைந்த நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்குள்ள மக்கள் பலர் தொழில்முனைவோராக இருக்கின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என திருச்செந்தூர் கூட்டத்திலேயே அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். அதற்கு எனது நன்றியைச் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக அரசு செய்துவரும் திட்டங்களில் சிலர் தேவையில்லாமல் பிரச்னைகளை உருவாக்க நினைக்கின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழகத்தில் நடைபெறவேண்டுமென்றாலும், அதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாகும். குறிப்பாக, இடம், உழைப்பு, பணம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதிகளைக் கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.  ஒன்றியத்தில் ஆளும் பாஜக, ஊடகத்தின் வழியாக அரசை நடத்தி வருகிறது. தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுக்கக் கூடியவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள். இங்கு மாற்றம் வராது. அவர்கள் எத்தனை முயற்சி எடுத்தாலும், இங்கே உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது. தமிழர்களாக ஒன்றிணைந்து தமிழ் உணர்வோடு வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தமிழகத்தை பாதுகாப்போம்’’என்றார். 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ’’தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு சிலர் அதில் உரிமை கொண்டாட முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், திமுக அவ்வாறு எதற்கும் சொந்தம் கொண்டாடுவதில்லை. குறிப்பாக, கடந்த 1996ஆம் ஆண்டு முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது, ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன. ஆனால், இவற்றை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திறந்து வைத்து அவர்களது பெயரை கல்வெட்டில் வைத்துக்கொண்டனர். அப்போது நாங்கள் ஏதாவது உரிமைக் கொண்டாடி தடுத்து நிறுத்தினோமா. இப்படியிருக்க தேவையில்லாமல் சிலர் தங்கள் பெயரை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமென்றால் உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அதிமுக  ஆட்சிகாலத்தில் 8 ஆண்டுகளில் சுமார் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்தன. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நகர்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கூடுதல் நிதிகளை ஒதுக்கீடு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது ரூ.950 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளதென்றால், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.200 கோடி மட்டுமேதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 85 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. அதில், பல பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சித்துறைக்கு ரூ. 23ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கம், குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதாகும்.  தமிழகத்தில், உள்ள நகர்புறங்களில் 60 சதவீதம் பேர் வாழ்ந்து வருகின்றனர். 10 சதவீதம்பேர் வந்து செல்கின்றனர். எனவே,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சுமார் 16ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 38 இடங்களில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய் - கனி சந்தை அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், மீண்டும், மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு வாய்ப்பளிக்கக்கூடியதாக அனைவரின் பணியும் இருக்க வேண்டும்’’ என்றார். 

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  பேசும்போது, ’’தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பர்னிச்சர் பூங்காவுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான பல்வேறு நிறுவனத்தினரிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மேலும் டைட்டில் பார்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தென் தமிழ் நாட்டில் தொழில் வளம் பெருகும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்.

மேலும் இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்தான் திட்டங்கள் விரைவாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் வேறு எந்த கட்சியும் குறை சொல்வதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும் எதுவுமே இல்லை என்கிற அர்த்தத்தில் பேசினர். 

மிகவும் உற்சாகமாக காணப்பட்ட அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பியின் கோபமான பேச்சையும்,  அமைச்சர் கீதாஜீவனின் கோர்வையான பேச்சையும் இப்போதுதான் பார்க்கிறேன் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமியின் ஆர்வத்தையும் பார்த்து ஆச்சர்யபட்டதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் அண்ணாச்சி பெரியசாமியோடு பணியாற்றியதை நினைவு கூர்ந்ததை கண்ட திமுக தொண்டர்கள், கை தட்டி ஆரவாரம் செய்தனர். 

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும்போது, ’’நான் தூத்துக்குடியில் இதுபோன்று ஒரு மாபெரும் விழாவை பார்த்ததே இல்லை’’ என்றார் 

போக்குவரத்து சம்பந்தபட்ட விழா என்பதால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் வந்திருந்தனர். அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் அவர்கள் ஆங்காங்கே நின்றுவிட்டு அப்படி அப்படி வெளியேறி சென்றுவிட்டனராம்.