தூத்துக்குடி சலவை தொழிலாளர்கள் வணிக வளாகத்தில் அரசு மதுபான விற்பனை - பாஜக கண்டனம்
Bjp news
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டி.எம்.பி. காலனி சாலையில் உள்ள சலவை தொழிலாளர்கள் வணிக வளாகத்தில், தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை நிறுவனம் (டாஸ்மாக்) சில்லரை கடை ஒதுக்கீடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக (பாரதிய ஜனதா கட்சி) தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டி.எம்.பி. காலனி சாலையில் உள்ள சலவை தொழிலாளர்கள் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் 500 சதுரஅடி பரப்பளவில் டாஸ்மாக் கடை செயல்பட மாத வாடகை ரூ.12,000 மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) என நிர்ணயம் செய்து மாமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதை அறிந்தேன்
அதே வளாகத்தில் உள்ள G3, G4, G5 கடைகளின் ஆரம்ப மாத வாடகை ரூ.13,250 மற்றும் 18% பொருட்கள் மற்றும் சேவை வரி (மொத்தம் ரூ.15,635) என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், குறைந்த வாடகையில் டாஸ்மாக் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டும், வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராத சூழலில் இந்த ஒதுக்கீடு விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
"போதை கலாச்சாரம் பெருகி தள்ளாடும் தமிழகமாக தலைகவிழிந்து நிற்கிறது " “தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய முடிவுகள் சமூக நலனுக்கு எதிரானவை,” என சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெண்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். வி.வி.டி சிக்னலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதே சாலையில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கப்படுவது அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும். இந்த தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சில மாமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாமன்ற உறுப்பினர் ஒருவர் தயவு செய்து அனுமதிக்க வேண்டாம்” என உணர்ச்சிவசப்பட்டு கோரிக்கை வைத்தது கூட்டத்தில் கவனத்தை ஈர்த்ததாக தகவல்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பது குறித்து எனக்கு விவரம் இல்லை. அவை குடியிருப்பு பகுதிகளில் உள்ளனவா என்பதும் தெரியாது. அவர்கள் கடை கேட்டு வருகிறார்கள்; அந்த இடத்தில் நடத்தக்கூடாது என்று என்னால் கூற முடியாது” என பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், “டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்” என முன்பு தெரிவித்த கனிமொழி எம்பி அவர்களின் தொகுதியிலேயே இத்தகைய பிரச்சனை எழுந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மாமன்ற உறுப்பினர்களின் கருத்தையும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் மதித்து உடனடி தலையீடு செய்து இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். மேலும் மேயர் ஜெகன் இந்த விவகாரத்தை நாம் தனியாக பேசலாம் என்று மாமன்ற உறுப்பினர் இடம் கூறுவதற்கு காரணம் ஏன் ஏதேனும் உள் அர்த்தம் இருக்கிறதா என சந்தேகம் எழும்புகிறது. எனவே இது குறித்து மேயர் தெளிவான விவரங்களை மக்கள் மத்தியில் வெளியிட வேண்டும், என அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது.
nadunilai.com