இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை நடத்திய ரெடீமர்ஸ் கோப்பைக்கான கபடி விளையாட்டு போட்டிகள்
Nalumavadi News
தூத்துக்குடி மாவட்ட அளவில் கிராம புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் ரெடீமர்ஸ் கோப்பைக்கான கபடி விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக நடுவர்கள், கன்வீனர் மைக்கேல், துணை கன்வீனர் அசோக்குமார், ஜெரால்டு ஜான்சன், கரிகாலன், முனீஸ்வரன் சாம்சன், ராதா கிருஷ்ணன், மகேந்திரன் கண்ணன், ஸ்டீபன், மணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வெற்றி அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி லாசரஸ் பரிசு தொகைகளையும், கோப்பைகளையும் வழங்கினார். மளவராயநத்தம் நண்பர்கள் கபாடி குழுவிற்கு முதல்பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை பக்கப்பட்டி டிஎஸ்ஆர் பிரதர்ஸ் அணிக்கும், மூன்றாவது பரிசு முறையே கேம்பலாபாத் ஜூனியர் அணி மற்றும் காயல்பட்டினம் நேத்தாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
பார்வையாளர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளாக எல் இ டி டிவி, தங்க நாணயம், பட்டு சேலை, பொங்கல் பானை, கிரைண்டர், மிக்ஸி, செல்போன் ஆகியவை குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காமராஜ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நவநீதன், போட்டி ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனா விருதுவீரர் மணத்தி கணேசன், தமிழ்நாடு மகளிர் சிறு,குறு தொழில் முனைவோர் சங்கத்தின் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வர்ணனையாளராக பணியாற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் பொதுமேலாளர் செல்வகுமார், விளையாட்டு துறை பொறுப்பாளர் எட்வின் சாம்ராஜ், பி.ஆர்.ஒ.சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
nadunilai.com