சுத்தி மதுக்கடைகளை திறந்து வைச்சுட்டு குடிக்காதேனு சொன்னா என்ன அர்த்தம்? - போலீஸ்முன் போட்டு தாக்கிய ஆட்டோர் டிரைவர்
IRCA News

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில்தான் இப்படி பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் ஆட்டோ டிரைவர் ஒருவர்.
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சில்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட் லைட் ஹவுஸ் என்கிற குடி போதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் விழிப்புணர் முகாம் நடத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன், மனநல சிறப்பு மருத்துவ சிவசைலம், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட எஸ்.பி வருகைக்கு முன்னர் காவல் ஆய்வாளர், மருத்துவர் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை பேச அழைத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
நடிகர் ரஜினி ஸ்டைலில் மைக்கை பிடித்த அந்த ஆட்டோ டிரைவர் கோடீஸ்வரனாக இருந்தால்தான் குழந்தைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க முடியும் என்பதில் தொடங்கி, சுத்தி சுத்தி கஞ்சா விற்கிறது, சுத்தி சுத்தி மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது குடிக்காதே குடிக்காதே என்றால் என்ன அர்த்தம் இருக்கிறது. கிடைக்கிறது என்றால் குடிக்கத்தான் செய்வார்கள். அப்படி குடிக்க எதுவும் கிடைகாமல் மெண்டல் ஆனால் ஆகட்டும் அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுங்க தப்பில்லை. கஞ்சா விற்கிறவனை, மதுவிற்கிறவனை, போதை மாத்திரை விற்கிறவனை பிடித்து உள்ளே போடுங்க. அதெல்லாம் கிடைக்கும்போது வாங்கி பயன்படுத்தத்தான் செய்வார்கள். அப்படியிருக்கும்போது யாரையும் திருத்தவே முடியாது. அந்த கடவுளே வந்தாலும் திருத்தவே முடியாது என்று குரலை உயர்த்தி ரஜினி ஸ்டைலில் கையசைத்து பேசுவதை பார்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர், மருத்துவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என அனைவரும் அதிர்ந்து போனார்கள். உஷாரான அவர்கள், போதும் என்று சிக்னல் காட்ட, சரி, ஓகே என்று சொல்லி மைக்யை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அதன் பிறகு பேசிய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், குடிப்பதால் ஏற்படும் தீங்கு பற்றி எடுத்துரைக்கவே வந்திருக்கிறோம். டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பேச வரவில்லை. பூச்சு மருந்து கிடைக்கிறது என்பதற்காக யாரும் வாங்கி குடிப்பதில்லை. அதுபோல் மதுவை குடிக்க வேண்டாம் என்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்கிற அர்த்தத்தில் பேசி சமாளித்தார்.
ஆட்டோ டிரைவரின் ஆதங்கம்தான் அங்கு கூடிநின்றவர்களின் விருப்பம் என்பதற்கு ஆதாரம், அவர் பேசிய போது அவருக்கு கிடைத்த கைத்தட்டல்கள்.