ஓட்டப்பிடாரம் பகுதியிலேயே அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Ottapitaram News

ஓட்டப்பிடாரம் பகுதியிலேயே அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

அவசியம் தேவைப்படுகிற இடத்திற்குதானே எந்த ஒரு தேவைகளும் முதன் முதலில் கொடுக்க வேண்டும்?. சட்டமன்ற தொகுதி எல்லை என்பதற்காக ஏற்கனவே கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதியிலேயே  கல்விநிலையங்களை அமைக்க முயற்சி செய்வது எந்த விதத்தில் நியாயம்? - இப்படித்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர் ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள்.

தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதி வறட்சியான மானாவாரி பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும். நிலம் எப்படி வறட்சியாக இருக்கிறதோ, அதுபோல் அங்கு கல்வி நிலையும் வறட்சியாகத்தான் இருக்கிறது. அதாவது கல்வி நிலையங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் இருக்கிறது. ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் கல்லூரிகளை கண் எட்டும் தூரம்வரை பார்க்க முடிவதில்லை.  செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் போன்றோர்  பிறந்த மண்ணான ஓட்டப்பிடாரத்தில்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால் தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை,  விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில்  கல்லூரி மாணவர்கள் இருந்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு தேவையற்ற அலைச்சலும் பெற்றோர்களுக்கு அதிக செலவுகளும் ஏற்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் தற்போதைய  சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா முயற்சியினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளதை அறிய முடிகிறது. இதை அனைவரும் வரவேற்கின்றனர். அதேவேளை, அது எந்த பகுதியில் அமைய உள்ளது என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தற்போது தற்காலியமாக கல்லுரி செயல்படுவதற்கான 11 வகுப்பு அறைகள், கல்லூரி முதல்வருக்கான அறை, கழிப்பிட வசதியுடன் கூடிய மேற்கண்ட வசதிகள் இந்தக் கட்டிடமானது ஓட்டப்பிடாரதில் உள்ள அரசு பள்ளியில் இல்லாத காரணத்தினால் அது ஓட்டப்பிடாரம் பகுதியை விட்டு வெகு தொலைவில் உள்ள இடத்தில் அமைய உள்ளது என்று கூறப்படுகிறது.  அப்படி அமைக்கப்படுமானால் ஓட்டப்பிடாரம் பகுதி மாணவர்கள் வெகு தொலைவில் உள்ள கல்லூரியை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்று ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள் கருதுகின்றனர்.  

எனவே ஓட்டப்பிடாரம் அருகிலேயே புதிதாக அமைய உள்ள கல்லூரியை கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.