வெப்பம் அதிகரிப்பிற்கு என்ன காரணம் ? - வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன்

Ramanan

வெப்பம் அதிகரிப்பிற்கு என்ன காரணம் ? - வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன்

விஞ்ஞானிகள், அறிவியல் வல்லுநர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள்,ஜோதிடர்கள் என எத்தனையோ ஆர்வலர்கள் அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பது ''மரங்களை பாதுக்க வேண்டும்'' என்பதைத்தான். இந்த மரங்களே மழைக்கு ஆதாரமாகவும், இயற்கைக்கு அடையாளமாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட மரங்களை உருவாக்கி பாதுகாக்கும் மலைகளையும், வனங்களையும் மனிதன் தனது தேவைக்காக அழித்து விடுகிறான். இந்த அழிவு, உலக வெப்ப மயமாதலுகு வழி வகிக்கிறது என்று உலகம் முழுவது வல்லுநர்கள் கதறி வருகிறார்கள். 

ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் மரங்களை அழிப்பது, மலையை குடைந்து வியாபாரம் செய்வது என்று இயற்கையின் சுழற்சியை சிதைத்து வருகின்றனர். இதன் விளைவுதான் தற்போது அனைவரும் வெப்பத்தில் தகிப்பது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அத்துடன் அதிகப்படியான வாகன பயன்பாடும் காரணம் என்கிறார் முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன். மேலும் அவர், ‘’தமிழகத்தில் இந்தாண்டு கூடுதல் வெப்பம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆண்டில் பதிவான வெப்ப அளவுகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 2-3 டிகிரி மட்டுமே வெப்பம் அதிகரித்து இருக்கிறது. பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் வெப்பம் 6 டிகிரி வரை கூடுதலாக பதிவாகிறது. 12 மணிக்கு உச்சி வெயில் என்று சொல்வார்கள். ஆனால், அதிகப்பட்சமாக வெயில் பதிவாவது 2.45 மணிக்குதான். காரணம், 12 மணிக்கு வெயில் இருந்தாலும், பூமியை கிரகித்துக் கொண்டு வெளியே வெப்பம் விடும் நேரம் 2.45 மணிதான். எனவே, வெயில் தற்போது அதிகரித்துள்ளதால், வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெயிலில் போகக் கூடாது. 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெயில் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்கு காரணம், மரங்கள் வெட்டப்பட்டு பெரிய கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டு தான். மரங்கள் அதிகமாக அழிந்து கட்டியங்களின் பரப்பு அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, மக்களும் அரசாங்கமும் இணைந்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு காரில் 4 பேர் செல்வதற்கு பதிலாக 4 பேர் 4 கார்களை தனித்தனியாக பயன்படுத்துகின்றனர். ஒரே காரை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் வாகன நெரிசலும் குறையும். வெப்பமும் குறைய வாய்ப்புள்ளது. பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தினாலும் வாகன நெரிசல் குறையும். 

வீட்டு மாடியில் வெள்ளை கலர் பெயின்ட் அடித்தால், வீட்டின் உள்ளே உஷ்ணம் இறங்காது. தரைகளில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டும். நிறையச் செடிகளை மாடிகளிலும் வைத்து வளர்த்தால் எல்லாருக்குமே நல்லது. அதே போல, சென்னையில் இந்த முறை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு குறைவு. ஏரிகளில் தண்ணீர் இருக்கவே செய்கிறது. தென் மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது’’ என்றார்.