பெரிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் - சங்க மாநாட்டில் தீர்மானம்

Panchayat news

பெரிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் - சங்க மாநாட்டில் தீர்மானம்

பெரிய ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை நிர்வாக நலன் கருதி பிரிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட  மாநாடு பாளை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் அண்டோ, மாவட்ட பொருளாளர் சுப்பையா, மாநில செயற்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மாநாட்டில் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் திரவியம், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் விநாயக சுப்பிரமணியம், தூத்துக்குடி ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், அரசு ஊழியர் மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் உமாதேவி ஆகியோர் பேசினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் பெரிய கிராம ஊராட்சிகளையும், அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட ஊராட்சி ஒன்றியங்களையும் நிர்வாக நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் வாவாஜி பக்கீர் முஹ்தீன் நன்றி கூறினார்.