புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே பெரியபிராட்டி குளக்கரையில் உடைப்பு - போக்குவரத்து முடக்கம்

Rain News

புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே பெரியபிராட்டி குளக்கரையில் உடைப்பு - போக்குவரத்து முடக்கம்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே உள்ள பெரியபிராட்டிகுளம் நிரம்பியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அதிகாலையில் அக்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள கரையில் உடைப்பு ஏற்பட்டது. 

அதிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் புதுக்கோட்டை ஊருக்குள் பாய்ந்தோடுகிறது. புதுக்கோட்டை - கூட்டாம்புளி சாலையை தாண்டிய அத்தண்ணீர் சிறுப்பாடு - சவேரியார்புரம் வழியாக குளத்திற்கு வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை - கூட்டாம்புளி - சாயர்புரம் - ஏரல் மற்றும் திருவைகுண்டம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 

ஒரு சில பேருந்துகள் மட்டும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தேரிரோடு, சாயர்புரம், சுப்பிரமணியபுரம் மற்றும் ஏரல் இடையே இயக்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.