தாமிரபரணி பாசன பகுதியில் முப்போகத்துக்கான நடவடிக்கை - தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வாக்குறுதி

election news

தாமிரபரணி பாசன பகுதியில் முப்போகத்துக்கான நடவடிக்கை  - தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வாக்குறுதி

தாமிரபரணி பாசனத்தில் முப்போகம் விளைந்திட தேவையான நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாப்பேன் என்று ஸ்ரீவைகுண்டம்  பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உறுதியளித்தார். 

பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  இன்று அவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்டாரவிளை, சிவகளை, பராக்கிரமபாண்டி, சாமியாத்து, ஸ்ரீமூலக்கரை, பத்மநாபமங்களம், தோழப்பண்ணை, ஆழ்வார்கற்குளம், கொங்கராயகுறிச்சி, கிளாக்குளம், அரசர்குளம், மல்லல்புதுக்குளம், மணல்விளை, அரியநாயகிபுரம், வெள்ளூர், பொன்னங்குறிச்சி, புதுக்குடி, பால்குளம், திருக்கோளூர், வெள்ளமடம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி, கீழ கருங்கடல், புளியங்குளம், செம்மங்குடியிருப்பு, பண்ணம்பாறை, முதலூர், நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, பூவுடையார்புரம், தட்டார்மடம் காந்திநகர், மணிநகர், படுக்கப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர், மண்ணின் மைந்தனாக நான் போட்டியிடுகிறேன். என்னை நீங்கள் எந்தநேரமும் நேரில் பார்க்கலாம். உங்களுக்கு உழைக்க காத்திருக்கிறேன். மற்றவர்கள் அப்படி இல்லை, ஜெயித்தவுடன் சென்னை சென்று விடுவார்கள். எனவே நீங்கள் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.  விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சில வருடங்களாக விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி பாசனத்தில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் முப்போகம் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறிட தாமிரபரணியின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தூர்வாருவதற்கு நான் உரிய நடவடிக்கை எடுப்பேன். தாமிரபரணி பாசனத்திலுள்ள பாசன வாய்க்கால்கள், பாசன குளங்கள் அனைத்தையும் தூர் வாரி விவசாயம் மேம்படுவதற்கும், முப்போகம் விளைந்திட தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். 
இந்த பகுதியிலுள்ள படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கும் மற்றுமுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வந்திடுவேன். கருங்குளத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசினர் கலைக்கல்லூரி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்திடுவேன்.நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பொதுமக்களின் கோரிக்கையான ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணிகளை உடனடியாக செய்து தருவேன். மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனையை நவீனமயமாக மாற்றி தந்திடுவேன் என்றார்.