ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

sterlite

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து விபரம் அறிந்தவர்கள் கூறியதாவது : 

1990க்கு முன்பெல்லாம் தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடிக்கடி சாதி மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. அது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் கமிஷன், தென் மாவட்ட இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் சாதி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பாகவும், பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் தொழிற்சாலை வேண்டும் என்கிற கோரிக்கைகள் வைக்கபட்டு வந்தது. அது சம்பந்தமாக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. 

இந்தநிலையில்தான் தூத்துக்குடிக்கு வேதந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் வரவழைக்கபட்டது. அனைத்து தரப்பின் ஆதரவோடு கடந்த 1994ம் ஆண்டு வேதந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1996ம் ஆண்டு பணிகள் முடிந்து அனைத்து துறைகளின் அனுமதிபெற்று 1997ம் ஆண்டு முதல் காப்பர் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கியது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நிறுவனம் அப்பணியில் ஈடுபட்டதன் மூலம் காப்பர் உற்பத்தியில் இந்தியாவை முக்கிய இடத்திற்கு கொண்டு வந்தது.  

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு ஆலையை விரிவாக்கம் செய்ய அந்நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டது. அப்போது அரசியல்வாதிகள் சிலர் அந்நிறுவனத்தில் உள்ள வேலைக்காக டெண்டர் எடுக்க முற்பட்டனர். ஆனால் அந்நிறுவனம் பெரும்பாலான வேலைகளை செய்ய எல்.என்.டி நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. இதனால் சில அரசியல்வாதிகளுக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே உரசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில்தான்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுவும் அப்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருந்த காலம் என்பதால் அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள், மத அமைப்புகள் என்று பல்வேறு தரப்பும் விளம்பரம் தேடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்பு போராட்டங்களை பயன்படுத்த தொடங்கினர். அதன் உச்சம்தான்  2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றது. அதன் விளைவு, போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அதைவைத்து பலரும் அரசியல் செய்தனர். தாக்குப்பிடிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. 2018ம் ஆண்டும் மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. ஆனாலும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பல்வேறு தொழில் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆலை நிர்வாகமும் பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்றங்களை நாடியிருந்தது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்ததற்கான தீர்ப்பை இன்று நீதிமன்றம் அளித்தது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்று அறிவித்ததோடு, ஆலையை திறக்க கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. 

இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தற்போது திறக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. தொழில், வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.