மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் விரைவில் தினசரி ரயிலாகும் - அமைச்சர் எல்.முருகன் உறுதி

Train news

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் விரைவில் தினசரி ரயிலாகும் - அமைச்சர் எல்.முருகன் உறுதி

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை - பழனி- ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி வழியாக  தூத்துக்குடி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 19ம் தேதி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், எம்.பி கனிமொழி, மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு அந்த ரயில் வழித்தடத்தில் இயங்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரயில் நிலையம்,பேருந்து நிலையம் மற்றும் திருச்செந்தூர் வரை சிறப்பு பேருந்துகளை இயக்கி ரயிலை வர்த்தக ரீதியில் வெற்றிபெற செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியினரும் இந்த ரயிலை பயன்படுத்த தயாராக உள்ளனர். அதற்காக நிரந்தர பேருந்து வசதியை கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த ரயில் வாராந்திர ரயிலாக இருப்பது அதற்கு தடையாக உள்ளது. எனவே இந்த ரயிலை தினசரி ரயிலாக ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினரும், அக்கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று அக்கோரிக்கை குறித்து நீலகிரியில் அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், மூன்றாவதாக ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடிஜி அவர்கள், உடனே 5 ரயில்களை இயக்க செய்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் ரயில் தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். மக்களும் அந்த ரயிலை ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதனை தினசரி ரயிலாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அது நடக்கும்’’ என்றார்.