தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம் - விபத்து அச்சத்தில் பொது மக்கள்

High way

தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம் - விபத்து அச்சத்தில் பொது மக்கள்

எப்பவோ ஒரு சில வாகனங்கள் கடக்கிற சாலையாக இருந்தால் அதில் உள்ள குறைகளை எப்பவாச்சும் சரி செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் கண் சிமிட்டும் நிமிடத்திற்குள் பல வாகனங்கள் கடந்துவிடும் சாலையாக இருந்தால் அது உடனே அது சரி செய்யப்பட வேண்டும்தானே? 

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது புதுக்கோட்டை. இங்குள்ள தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு நெல்லை, திருவைகுண்டம் உள்ளிட்ட  வழித்தடத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லவில்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது பொதுமக்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என அனைவருக்கும் தெரிந்ததுதான். 

தற்போது புதுக்கோட்டைக்கு வெளியில் உள்ள சர்வீஸ் ரோடுகள் அதிக போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.  அவ்வாறு சர்வீஸ் ரோடுகளில் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு மாறும்போதும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் ரோடுகளுக்கு மாறும்போதுதான் பிரச்னை. தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் ரோடுகள், ஊருக்குள் சென்று வெளியே வரும் வாகங்கள் என்று பல முனைகளில் இருந்து வரும் வாகனங்கள் ஒரே இடத்தில்தான் சந்திக்கின்றன. 

அந்த இடம்தான் இப்போது பிரச்னை. ஒன்றுக்கொன்று கிராஸ் செய்யும்போது விபத்துக்கள் நடக்கிறது. இதில் பெரிய விபத்துக்கள் நடக்கும் முன்னர் அந்த இடத்தில் எதாவது மாற்றம் செய்தாக வேண்டும். தூத்துக்குடி நோக்கி செல்லும் வாகனங்கள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு மேம்பாலத்தையொட்டியுள்ள சர்வீஸ் ரோட்டை மேலும் கொஞ்சம் நீட்டிக்க வேண்டும். அவ்வாகனங்கள் விசாலமாக சென்று திரும்பும்படி செய்ய வேண்டியது மிக அவசியமாக உள்ளது. அனைத்து வாகனங்களும் ஒரே இடத்தில் குவிந்து செல்வதை  ஆபத்தமான பயணமாகவே பார்க்கமுடிகிறது. 

எனவே தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.