பதற்றத்திற்கிடையில் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் கப்பல் இந்தியா வருகை

HORMUZ

பதற்றத்திற்கிடையில் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் கப்பல் இந்தியா வருகை

ஹார்மோஸ் ஜலசந்தி பதற்றத்திற்கிடையில் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் கப்பல் மும்பை வந்தடைந்தது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கிடையில், சவுதி அரேபியாவில் இருந்து 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் மும்பை துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்த முதல் கப்பல் இதுவாகும்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த கடல் வழி பாதிக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.

இந்த சூழ்நிலையில், சவுதி அரேபியா நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகமான ராஸ் தனுரா துறைமுகம் துறைமுகத்தில் மார்ச் 1ஆம் தேதி இந்த கப்பலில் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டது. பின்னர் மார்ச் 3ஆம் தேதி அங்கிருந்து கப்பல் புறப்பட்டது.

ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, கப்பலில் உள்ள Automatic Identification System (AIS) எனப்படும் தானியங்கி அடையாள அமைப்பு மார்ச் 9ஆம் தேதி தற்காலிகமாக அணைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் கப்பலின் அடையாளம், வேகம், பயண திசை மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் அல்லது துறைமுகங்களை கண்காணிக்க முடியும்.

மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் வந்த இந்த கப்பல் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் மும்பை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் இருந்து இறக்கப்படும் கச்சா எண்ணெய், மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ள மகுல் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது.

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்ட டைனமோகோம் டாங்கர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலின் கேப்டனாக இந்தியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 28 பேர் மாலுமிகளாக கப்பலில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்து அச்சம் நிலவியது. இந்த நிலையில், இந்த கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தது எரிபொருள் விநியோகத்திற்கு ஒரு நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில், இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் பெரிய அளவிலான தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தாமல் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட வேண்டாம் என்றும் பொதுநலவாதிகள் மற்றும் நடுநிலைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.