பணி நிறைவு பெறும் அக்னிவீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் வேலை வழங்க வேண்டும்

Agnipath Scheme

பணி நிறைவு பெறும் அக்னிவீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் வேலை வழங்க வேண்டும்

புதிய தலைமுறை இளைஞர்களை ராணுவ சேவையில் ஈடுபடுத்தும் அக்னிபாத் திட்டம் மூலம் தேர்வாகும் அக்னிவீரர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து  முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு (2027) முதல் பணி நிறைவு செய்ய உள்ள அக்னிவீரர்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அரசு வேலைகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை, அக்னிவீரர்களின் சேவைக்கு பிறகான வாழ்க்கையை பாதுகாப்பதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அக்னிபாத் திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகள் – நிலை, கடல், வான்படை – ஆகியவற்றில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் தற்காலிக சேவைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேவையின்போது திறமையாக செயல்படும் 25% பேர் நிரந்தரப்படுத்தப்படுவர். மீதமுள்ள 75% அக்னிவீரர்கள் சேவை முடிந்ததும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு குறித்து தொடக்கத்திலிருந்தே விவாதங்கள் எழுந்து வந்தன.

இந்தநிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநில அரசுகள் கீழ்க்கண்ட துறைகளில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது : காவல்துறை (Police), வனத்துறை காவலர்கள் (Forest Guards), தீயணைப்பு துறை (Fire & Rescue Services), சிறைத் துறை (Prison Department), சுரங்க பாதுகாப்பு, மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இந்த துறைகள் அனைத்தும் உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் திடப்பண்பு தேவைப்படும் பணிகள் என்பதால், அக்னிவீரர்கள் இத்துறைகளுக்கு ஏற்றவர்கள் என கருதப்படுகிறது.

ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கனவே அக்னிவீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இது குறித்து ஹிமாச்சல் பிரதேச ராணுவ வீரர் நலத்துறையின் முன்னாள் இயக்குநர் பிரிகேடியர் மதன் ஷீல் ஷர்மா கூறியதாவது: “அக்னிவீரர்கள் 4 ஆண்டுகள் கடுமையான ராணுவ பயிற்சி மற்றும் ஒழுக்கத்தை பெற்றவர்கள். அவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகள் முன்வர வேண்டும்”என்று கூறியுள்ளார். 

இதற்கிடையில் பொதுநலவாதிகள் கூறுவதாவது: அக்னிவீரர்களுக்கு பாதுகாப்புத் துறைகளில் மட்டும் அல்லாமல் நிர்வாகம், தொழில்நுட்பம், பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். அக்னிபாத் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு உடல் வலிமை, ஒழுக்கம், நாட்டுப்பற்று ஆகியவை உருவாகின்றன. சமூகத்தில் கட்டுப்பாடும், பொறுப்புணர்வும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சேவை முடிந்தபின் வேலைவாய்ப்பு உறுதி இல்லாதது குறித்து இருந்த கவலைக்கு, எல்லை பாதுகாப்பு படைக்கு 25 சதவீதம்பேரை மத்திய அரசு எடுத்துக் கொள்வதும், மாநில அரசுக்கான 20% இடஒதுக்கீடு பரிந்துரை செய்திருப்பதும் ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது. 

அதேவேளை, இந்த வீரர்களுக்கு பாதுகாப்பு துறைகளில் மட்டுமன்றி, பல்வேறு அரசு துறைகளிலும் அவர்களை இணைத்தால், நாட்டுப்பற்று கொண்ட திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும். சமூக வளர்ச்சிக்கும் அது துணை புரியும். இதனால், அக்னிவீரர்களுக்கான வேலைவாய்ப்பு கொள்கை எதிர்காலத்தில் மேலும் விரிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி நிறைவு பெறும் அக்கினி வீரர்களுக்கு மத்திய அரசுகளின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்கிற போது பாதுகாப்புதுறை மேம்படுவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குடிமகனும் நாட்டு நிர்வாகத்தில் தொடர்புள்ளவனாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மாநில அரசுகளுக்கு 20 சதவீதம் வேலை கொடுக்க வேண்டும் என்று உள்துறை அறிவுறுத்தியிருப்பதுபோல், மத்தியரசும் பல்வேறு துறைகளில் அக்கினி வீரர்களை பணியமர்த்த வேண்டும். 

அப்போதுதான் பாரத் மாதாஹி ஜே என்று ஒவ்வொருவரும் உணர்ச்சி பொங்க அழைப்பர்.