முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்விடுத்ததாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கைது - பதற்றத்தில் திமுகவினர்
Dmk News
அதிகாரத்தோடு வலம் வந்தவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதுடன், அது கேள்விக்குறியாகும்போது பதற்றம் வருகிறது. அப்படித்தான் திமுகவினர் பதற்றத்துடன் வலம் வருவதாக தெரிகிறது. செய்தியாளர்களிடம் பேசும்போதும், மேடைகளில் பேசும்போதும் திமுகவினர் ஆளும் தவெக வினரை எந்த அளவிற்கு மதித்து பேசுகிறார்கள் என்பதை வைத்து இதை கணிக்க முடிகிறது. யாரும் எதிர்பாராத வகையில் தவெக ஆட்சி அமைந்துவிட்டது. சினிமா நடிகராக இருந்த விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகிவிட்டார். இதை ஆண்ட கட்சிகளால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. அதிமுகவை விட திமுகவே அதிகம் விஜய் மற்றும் தவெகவை விமர்சனம் செய்து வருகிறது.
ஒன்றும் தெரியாதவர்கள், இவர்களின் ஆட்சி சில மாதங்களில் முடிந்துபோகும் என்பதில் துவங்கி, கையை ஒடிப்போம், காலை ஒடிப்போம் என்பது போன்றவைகளையும் தாண்டி திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவான அனிதாராதாகிருஷ்ணன், அவரை தொடர்ந்து இப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் தமிழக முதல்வர் விஜயை அவதூறாக பேசினார்கள் என்கிற வழக்கில் சிக்கி உள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கைதாகி ஜாமினில் இருந்து வரும் நிலையில் மார்க்கண்டேயன் இப்போது சிக்கியுள்ளார். கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது முதல்வர் எலும்பை உடைப்போம் என்கிற அர்த்தத்தில் பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட இன்று காலையிலேயே விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயன் வீட்டில் போய் நின்றது போலீஸ்.
தமிழக முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக அவரை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆபீசுக்கு அழைத்து சென்ற போலீசார் மாலை வரை அங்கேயே வைத்திருந்தனர். மார்க்கண்டேயனை பார்க்க வேண்டும் என்று திமுகவினரும், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மற்றும் கோவில்பட்டி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழக்கறிஞர் படையுடன் அங்கே சென்றனர். ஆனால் அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அனுப்பி வைத்தது போலீஸ். பிடிவாதம் பிடித்து தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் மடத்தூரில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுக்கிடையில் மாலை நேரத்தில் மார்க்கண்டேயனை மெடிக்கல் செக்கப்பிற்கு தூத்துக்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது முண்டியடித்த பத்திரிக்கை, மீடியாகாரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே முட்டல் மோதல் வந்து நின்றது. அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, என்னை ஓரமாக அழைத்து சென்று போலீசார் அடிக்க பார்க்கிறார்கள் என்று மீடியாவை பார்த்து சப்தம் போட்டுவிட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அனிதாராதாகிருஷ்ணன் போல் மார்க்கண்டேயனுக்கும் உடனே ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா? என்று திமுகவினர் எதிர்பார்த்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகுதான் மடத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்பட திமுகவினர் வெளியே வரமுடியும் போல் தெரிகிறது. இந்த சம்பவங்கள் மூலம் திமுகவினர் பதற்றமடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.
nadunilai.com