நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவது யாருக்கு இழப்பு? - வலுப்பெற்று வருகிறது பொதுமக்கள் கேள்வி
Parliament
புதுடெல்லி:6
நாடாளுமன்றம் முடங்குவது யாருக்கு இழப்பு என்று கேள்வி கேட்க துவங்கியுள்ள பொதுமக்கள், மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீட் தேர்வு தொடர்பான போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மோதல்கள் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதம் அதிகரித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் என்று கூறி டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமல்லாமல் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றதாகவும், சில அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள் தொடர்ந்து கோஷம் எழுப்புவதால் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கும் நிலையில் உள்ளது. இதனால் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் தயாராக உள்ள மசோதாக்கள் தொடர்ந்து முடங்குவதாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரோ போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும், அதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், "ஜனநாயகத்தில் போராட்டம் நடத்தும் உரிமை இருப்பதுபோல, பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் பேரணியாக நுழைய முயற்சித்தால் போலீசார் சட்டம்-ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் கடமைதான். அத்தகைய சூழலில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்திருந்தால், முழுமையான விசாரணையின் அடிப்படையில் உண்மைகள் வெளிவர வேண்டும். சம்பவத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் நியாயம். மாணவர்கள் என்பதற்காக அவர்கள் தவறு செய்தாலும் விட்டுவிட வேண்டும் என்பது போல் செயல்படுவதும், போலீசார் என்பதற்காக அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போலவும் சிலரின் எதிர்பார்ப்பு சரியான நடுநிலையாக இருக்காது"என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பதிவாகி வருகின்றன.
இதற்கிடையே,"நாடாளுமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் உயரிய ஜனநாயக மேடை. அரசும் எதிர்க்கட்சிகளும் அரசியல் கருத்து வேறுபாடுகளை அவையில் விவாதித்து தீர்வு காண வேண்டும்; தொடர்ந்து அவை முடங்குவது மக்களுக்கே இழப்பை ஏற்படுத்தும்" என்ற கருத்தும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
nadunilai.com