2023ம் ஆண்டு மழை வெள்ளகாலத்தில் மக்களுக்கு உதவவில்லை - திமுக, பாஜக இடையே பரபரக்கும் தேர்தல் குற்றசாட்டுகள்

Flood News

2023ம் ஆண்டு மழை வெள்ளகாலத்தில் மக்களுக்கு உதவவில்லை - திமுக,  பாஜக இடையே பரபரக்கும் தேர்தல் குற்றசாட்டுகள்

2023ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள்  சேதமடைந்ததுடன், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், அந்த பேரிடருக்கான நிர்வாக பொறுப்புகளை மறைத்து, சமூக நலத்துறை அமைச்சர்  கீதா ஜீவன்  மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர், 2023 வெள்ளப்பெருக்கின்போது பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம்சாட்டி வருவது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட தவறான பிரச்சாரம் என பாஜக தரப்பில் குற்றச்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, பாஜக தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “மக்கள் உயிர் காக்க போராடிய நேரத்தில் காணாமல் போனவர்கள், இன்று மேடைகளில் தோன்றி அரசியல் லாபம் தேடுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றினர். அவர்கள் இல்லையெனில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்திருக்கும்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தங்களது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கினர். உடைகள், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்றன.

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக மீட்டதும் பாஜக நிர்வாகிகளே. மேலும், பாஜக இணை அமைப்பான சேவா பாரதி, தூத்துக்குடியில் உள்ள பல திருமண மண்டபங்களில் நிவாரண மையங்களை அமைத்து தொடர்ந்து உதவிகளை வழங்கியது மக்களுக்கு தெரிந்த உண்மை. இவ்வாறான உண்மைகளை மறைத்து, திமுக தொடர்ந்து பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக சார்பில் தனிப்பட்ட முறையில் ஒருவருக்குக் கூட உணவு வழங்கப்பட்டதில்லை; அரசு நிதியை மட்டுமே பயன்படுத்தி புகழ் தேடும் அரசியல் தான் நடைபெற்று வருகிறது.

பேரிடர் நேரத்தில் சேவை செய்தவர்களை விமர்சிப்பது அரசியல் பண்பாடு அல்ல; அது மனிதநேயத்திற்கே எதிரானது. மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். வருங்காலத்தில் இதற்கான பதிலை அவர்கள் தகுந்த நேரத்தில் வழங்குவார்கள்,” என அவர் கடுமையாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.