அதிமுக வேட்பாளர்கள் : ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்
Admk
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்)23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தற்போது வேட்பாளர் தேர்வுகள் முடிந்து அதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் கிட்டத்தட்ட எந்தந்த தொகுதிகள் யாருக்கு என்பது தெரிவிக்கபட்டுவிட்டது. திமுக கூட்டணியில் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வரவுள்ளது.
தேர்தல் நடைபெற போகிறது என்றதும் அரசியல் கட்சிகளின் விசுவாசிகள், தமது கட்சி எந்த கூட்டணியில் இணைய போகிறது. அதில் எந்தந்த கட்சிகள் எல்லாம் இருக்கிறது?. எந்தந்த தொகுதிகளில் போட்டிபோட போகிறது?. யார் யாரெல்லாம் போட்டிபோடுகிறார்கள்? தமக்கு நெருக்கமானவருக்கு போட்டிபோட வாய்ப்பு கிடைக்கிறதா என்கிற எதிர்பார்ப்பிற்குள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதுமாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எந்தந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பது தெரிய வந்திருக்கிறது. யார் யாரெல்லாம் போட்டிபோடுகின்றனர் என்பது இன்று தெரிய வந்திருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் என 6 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. அதிமுக தலைமை முதற்கட்ட அறிவிப்பின் போது கோவில்பட்டியில் அதிமுக சார்பில் ஏற்கனவே எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்திருக்கிறது. மேலும் திருச்செந்தூர் தொகுதி பாஜகவிற்கும், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுகவிற்கும் மற்ற தொகுதிகள் அனைத்திலும் அதிமுக போட்டியிடும் என்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் கோவில்பட்டியில் யார் போட்டியிடுகிறார் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டது. அதுபோல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என்று முடிவு செய்ய முடிந்தது. ஆனால் தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவார் என்று தெரியாமல் இருந்தது. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாலும் அதனை மறுக்கும் வகையில் சிலரின் பேச்சுக்கள் இருந்து வந்ததால் முடிவு செய்ய முடியாமல் இருந்தது. போதாத குறைக்கு இன்று காலை வெளியான தினசரி நாளிதழ் ஒன்றில் சுதாகர் களத்தில் இறங்குகிறார் என்று மிக உறுதியான தகவல் போல் செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் பார்த்து பலரும் குழம்பியிருந்தனர்.
அதேவேளை செல்லப்பாண்டியன் தரப்பிடம் நாம் கேட்டபோது நிச்சயமாக அண்ணாச்சிக்குதான் சீட் வழங்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். அதிமுக தலைமையின் மூலம் பிற்பகலில் வேட்பாளர் பட்டியல் வெளியானதில், சி.த.செல்லப்பாண்டியன் பெயரே இடம்பெற்றிருந்தது. எனவே தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக உள்ள அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக போட்டியிட உள்ளார் சி.த.செல்லப்பாண்டியன். விளாத்திகுளத்தில் திருமதி சத்தியா போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர்களும் களத்தில் இறங்க உள்ளனர். ஏப்ரல், மே வெயிலின் அனலுடன் தேர்தல் அனலும் சேர்ந்து கடும் அனலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
nadunilai.com