மேயர் மனு வாங்கும் நாள் புதனுக்கு பதில் செவ்வாய்கிழமையென மாற்றம் - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்

Thoothukudi news

மேயர் மனு வாங்கும் நாள் புதனுக்கு பதில் செவ்வாய்கிழமையென மாற்றம் - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாரந்திர மனு வாங்கும் நாள் இந்த வாரம் மட்டும் புதன் கிழமைக்கு பதில் ஒரு நாள் முன்னதாக செவ்வாய்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி  நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அதன் அடிப்படையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள், மண்டல வாரியாக முகாம்களில் கலந்து  கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய அடுத்த மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக  அதற்கு முந்தைய தினமான செவ்வாய்க்கிழமை (30.7.24) அன்று நடைபெற  உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மேற்படி தினத்தில் தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00  மணிக்கு தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 43,45,48,49,52 முதல் 60 )ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம். எனவே, இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநகர பகுதியில் சபா கூட்டம், வாரந்திர மண்டல மக்களிடம் மனு வாங்குதல் என்று பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் முயற்சியில் மேயர் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் உள்ளூர் அமைச்சரான கீதாஜீவனும் அதே நாளில் இன்னொரு மண்டலத்தில் கோரிக்கை மனுவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அதிகாரிகள் யார் பக்கம் போவதென்று தெரியாமல் திகைத்தனர். இதனால் குழப்பம் நிலவியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதற்கிடையே மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் புதன் கிழமை நடத்தும் மனு வாங்கும் நாள் ஒரு நாள் முன்னதாக செவ்வாய் கிழமையே வாங்கப்படும் என்று ஆணையர் அறிவித்திருக்கிறார். புதன் கிழமை ஆணையர் டெல்லிக்கு செல்ல வேண்டியது இருக்கிறது என்பதும், புதன் கிழமை மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெறும் என்பதாலும் இந்த கிழமை மாற்றங்கள் நடந்துள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.