சனாதன எதிர்ப்பு பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ் செய்தது என்ன?

Udhayanidhi stalin

சனாதன எதிர்ப்பு பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ் செய்தது என்ன?

சனாதன தர்மம் டெங்கு, மலேரியா போன்றது. அந்த நோய்களை ஒழிப்பது போல், அதையும் ஒழிக்க வேண்டும்  என்று பேசி, அதைத் திரும்பத் திரும்பப் பேசுவேன், அதனால் நீதிமன்றங்களிலோ,மக்கள் மன்றங்களிலோ என்ன எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்வேன் என்று முதல்வரின் மகனும், திமுக இளவௌம், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சூளூரைத்தது நினைவிருக்கும். அவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. நாரெங்கும் வழக்குகள் பதிவாகின. அதனால் அவர் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார் என்று மார்தட்டிக் கொண்டனர் கழக குடும்பத்து நண்பர்கள். நீதிமன்றத்தின் மூலம் எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்வேன் என்று இறுமாப்புடன் கூறிய அவரை, உச்சநீதிமன்றம் கண்டனம் செய்தது. அவரது வக்கீல் அவருக்காகக் கெஞ்சிப் பேச வேண்டிய வந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து,சனாதன தர்மம் என்றால் என்ன என்று அவருக்கு பாடம் எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். 

சனானத்தை இழிவுபடுத்திய தனக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் பதிவான கிரிமினல் எஃப்.ஐ.ஆர்-களைச் சேர்த்து, உச்ச நீதி மன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி, அரசியல் சாஸனப் பிரிவு 32-ன் கீழ் அங்கே மனுப் போட்டார் உதயநிதி. உதயநிதி சார்பாகப் பேச எழுந்த பிரபல வக்கீல் அபிஷேக் சிங்வியைப் பார்த்து உச்ச நீதிமன்றம் வெடித்தது. (சனாதனம் பற்றி அவதூறு பேசி) அரசியல் சாஸனப் பிரிவு 19 தரும் பேச்சுரிமையை துஷ்பிரயோகம் செய்தீர்கள். பிரிவு 25 தரும் மத உரிமையையும் துஷ்பிரயோகம் செய்தீர்கள். இப்போது பிரிவு 32 தரும் உரிமையையும் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் என்று கடுமையாகச் சாடினர் நீதிபதிகள். நீங்கள் கூறியதன் விளைவுகள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பாமரன் அல்ல, அமைச்சர். பேசியதன் விளைவுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் எச்சரித்தனர் நீதிபதிகள்.

நீதிமன்றமானாலும் சந்திப்பேன் என்று சூளுரைத்த உதயநிதியின் வக்கீல் சிங்வி, நீதிபதிகளைக் கெஞ்ச வேண்டி வந்தது. வழக்கை விமர்சித்தோ, நியாயப்படுத்தியோ நான் வார்த்தை பேசவில்லை, உதயநிதிக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்-களை சேர்த்து விசாரணை செய்யும் கோரிக்கையில், வழக்கு (நியாயமா - இல்லையா என்பது) குறுக்கிட வேண்டாம் என்று தாழ்மையாகப் பேசினார் அவர். வெளியே நீதிமன்றத்துக்கு எதிராக வீராப்பு உச்ச நீதிமன்றத்திலோ வக்கீல் கெஞ்சல், இதுதான் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு. 

சனாதன ஒழிப்பு மாநாட்டில்  அது பற்றி இழிவாக பேசிய அமைச்சர்கள் உதயநிதியும், சேகர் பாபுவும் பதவியில் தொடரத் தகுதியில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று கோரும் ரிட் மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், சனாதன தர்மம், ஹிந்து மதம், தர்மம் என்றால் என்ன அதை இழிவுபடுத்திய உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா மூவருக்கும் விளக்கமாகப் பாடம் எடுத்தது.அதைச் சுருக்கித் தருகிறோம். சனாதன தர்மம் என்பது கால வரையறைகளைக் கடந்து தொடரும் அனைவருக்கும் பொதுவான வாழ்க்கை நெறி, சேகர் பாபு கூறியது போல் சனாதன தர்மமும், ஹிந்து மதமும் வேறல்ல, பிரிக்க முடியாதது. தர்மம் என்பதுபொதுவான நெறிகள். தர்ம என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் அறம் என்ற தமிழ் சொல்லும் ஒழுக்கம், எளிமை, உயர்ந்த சிந்தனைகளுடன் வாழும் நெறிமுறைகளைக் குறிக்கும். திருக்குறளும்(குறள் 31 முதல் 40 வரை) மற்ற தமிழ் இலக்கியங்கள் பலவும் அறத்தைப் பற்றி விவரமாகக் கூறியிருக்கின்றன. 

வர்ண தர்மம் என்பது தொழில் ரீதியான பாகுபாடே தவிர, பிறப்பினாலான பிரிவல்ல. வர்ணமும், ஜாதியும் ஒன்றல்ல. சனாதன தர்மமும், ஹிந்து சமயமும் ஒன்று என்பதற்கு விவேகானந்தர், அரவிந்தர் போன்ற சான்றோர்களை மேற்கோள் காட்டியது உயர் நீதிமன்றம். சனாதன தர்மம்தான் நாட்டின் தேசியம், சனாதன தர்மம் வாழும்வரை ஹிந்து மதம வாழும். பாரத தேசமும் வாழும் என்று அரவிந்தர் கூறியதைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டியது நீதிமன்றம். ஆர்யன் என்ற சொல்லுக்கு அர்த்தம், உயர்ந்தவன் என்பதே,அது இனத்தைக் குறிப்பது அல்ல. உதயநிதியும், ஆர்.ராசாவும் பேசிய சனாதன தர்ம ஒழிப்பு, உயர்ந்த வாழ்க்கை நெறிகளை ஒழிப்பதற்குச் சமம். இப்படி சனாதன தர்மத்தை விளக்கிய நீதிமன்றம், அதை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசுவது அரசியல் சாஸன நெறிகளுக்கு எதிரானது என்றும், அதன் விளைவுகள் என்ன என்றும் பாடம் எடுத்தது. 

உதயநிதியும், சேகர்பாபுவும் அரசியல் சாஸன விதி நெறிகளைக் குப்பையில் எறிந்து விட்டு, சனாதன தர்மத்தை இழிவுசெய்ததைக் கண்டனம் செய்தது நீதிமன்றம். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு மதத்தை அழிப்போம் என்று கூறுவதை ஏற்க முடியாது. சனாதன தர்ம எதிர்ப்புக்கு அரசின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முதலமைச்சர் ஆணையிட்டது போல், அமைச்சர் உதயநிதி பேசியது அச்சுறுத்தல். தங்கள் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், அமைச்சர்கள் அரசியல் சாஸன ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா,மலேரியா, தொழுநோயுடன் ஒப்பிட்டது வக்கிரமானது. அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்துள்ளனர் என்று இடித்துரைத்தது நீதிமன்றம். 

மேலும் நீதிமன்ற அதிகாரங்களும் ஒரு எல்லைக்குட்பட்டவை, எல்லையைத் தாண்டி அந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்கலாம் என்பது பற்றி எந்த உத்தரவும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. காரணம், அமைச்சர்கள் மீதான குற்ரச்சாட்டுகள் பல இடங்களில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்துக்கும்  வழக்கு போயிருக்கிறது. குறிப்பாக, ஆளுநரிடம் பதவி நீக்கம் கோரும் மனு நிலுவையில் உள்ளதால், அரசியல் சாஸன அதிகாரம் பெற்ற அவரிடமே முடிவை விட்டுவிடுவது முறையாக இருக்கும் என்று கூறிய நீதிமன்றம், தார்மீக ரீதியாக அமைச்சர்கள் பதவியில் தொடரத் தகுதி உள்ளவர்களல்ல என்று கூறாமல் கூறிவிட்டது. 

ஆன்மிகம், சித்தாந்தம்,அறிவியல்,சரித்திரம்,இலக்கியம்,அரசியல் சாஸனம்,சட்டம் போன்ற பல விஷயங்களை இணைத்து உள்ளடக்கி, நீதிபதி அனிதா சுமந்த் எழுதிய இந்த மகத்தான தீர்ப்பு ஒரு அறிவுசார் விருந்து (intellectual treat)என்றால் அது மிகையல்ல. 

உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உதயநிதியை, நீங்கள் பாமரன் அல்ல, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய அமைச்சர் என்று கூறியிருக்கிறது. சினிமா, சொகுசுக் கார், பணம் என்று உல்லாசமாக இருந்து சுகம் கண்ட உதயநிதி, திடீரென்று அமைச்சரானார். பயிற்சியில்லாது பெரும் பதவி பெற்று, சுற்றி இருப்பவர்கள் ஜால்ரா அடித்ததில் கிறுகிறுத்து, தான் அமைச்சர் என்பதை மறந்து தாறுமாறாகப் பேசியதால் கடுமையான விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார் அவர். அமைச்சரான அவர் இளம் கன்று என்றால், அரசியல் ரீதியாக அவர் கற்றுகுட்டி என்றுதான் அர்த்தம். கடுமையான அனுபவங்கள்தான் வாழ்க்கையில் பாடம் கற்றுத் தரும். நீதிபதி அனிதாசுமந்த் எழுதிய கஷ்டமான பாடத்தை உதயநிதி படிப்பது அவருக்கு நல்லது. நூறு பக்கத்துக்கும் மேலான அதை அவர் படிப்பார் என்று தோன்ற வில்லை. அவர் நலனில் அக்கறை இருப்பவர் யாராவது படித்து அவருக்குப் புரியும்படிக் கூறி, அதை படிப்பினையாக எடுத்துக் கொள்வது அவருக்கு நல்லது. யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற திமுகவினர் படிக்காமல் போற்றும் வள்ளுவரின் வாக்கை, அனிதாசுமந்த் கூறிய தீர்ப்பு உதயநிதிக்கு நினைவு கூறும்.