மாநகராட்சி எல்லை சாலைகளில் உயர் கோபுர மின் விளக்குகள் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
Thoothukidi Mayor

தூத்துக்குடி மாநகரில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் சாலையில் புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தற்போது இந்த சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பெரும்பாலான பகுதிகள் இருளாக இருப்பதால் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மாநகர பகுதிக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கும் மின் விளக்குகளுக்கு மின்சாரம் கொடுப்பது யார் என்பதில் நீண்ட காலமாக இழுபறி இருந்து வந்தது. இந்நிலையில் மாநகர பகுதிக்குள் செல்லும் சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தால் மின்சாரத்தை மாநகராட்சி சார்பில் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கபட்டது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நகர பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக முக்கிய சந்திப்புகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் மேயர் ஜெகன் பெரியசாமி மின் விளக்குகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுடன் தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த மின் விளக்குகள் அமைப்பதின் மூலம் சுமார் 12 கிலோ மீட்டர் வரை மாநகராட்சியின் எல்லை பகுதிகள் பயன்பெறும் என்றார். அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திட்ட இயக்குநர் சிவம், மாநகராட்சி ஆணையரின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளர் ரமேஷ், அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனர்.
தற்போது புதிதாக பல்வேறு பகுதிகள் தூத்துக்குடி மாநகராட்சி எல்லையோடு இணைக்கும் நடவடிக்கையில் இருப்பதால் அந்த பகுதிகளிலும் விரிவான மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் உள்ளது என்கிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாநகரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கோரம்பள்ளம், புதுக்கோட்டை வழியாக வாகைகுளம் வரை நீட்டிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இணைக்கப்படும் அனைத்து பகுதிகளுக்கும் இதேபோன்று மின்விளக்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.