டெல்லி ஏ.ஐ மாநாட்டில் காங்கிரஸார் ரகளை - பிரதமர் மோடி கண்டனம்

BJP - Congress

டெல்லி ஏ.ஐ மாநாட்டில் காங்கிரஸார் ரகளை - பிரதமர் மோடி கண்டனம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பிரதமர் மோடி கடுமையான பதிலடி அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும், வெளிநாட்டு மேடைகளிலும் இந்தியாவில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது குறித்து பாஜக மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் அல்லது சர்வதேச முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் தருணங்களில், ராகுல்காந்தி தரப்பிலிருந்து மத்திய அரசை குறிவைத்து விமர்சனங்கள் எழுப்பப்படுவது இந்தியாவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பாஜக வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின்போது இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் மேலாடையை கழற்றி கோஷமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த செயலுக்கு பாஜக மட்டுமின்றி, காங்கிரஸ் தவிர பிற எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற நமோ பாரத் அதிவிரைவு ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஒரே மேடையில் இருந்து நமோ பாரத் விரைவு ரயிலும், மீரட் மெட்ரோ சேவையும் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “இது பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.

2004 முதல் 2014 வரை இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பல சர்வதேச ஒப்பந்தங்கள் தடைபட்டதாக அவர் விமர்சித்தார். தற்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பதற்கு ஊழலற்ற நிர்வாகமும் ‘தேசமே முதலில்’ என்ற கொள்கையும் காரணம் என தெரிவித்தார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏஐ மாநாடு எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல; அது இந்தியாவுக்குரியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என பிரதமர் கூறினார். “மோடி எதிர்ப்பு என்பதே காங்கிரஸின் அரசியல். ஆனால் தேசத்தை இழிவு படுத்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்றும் அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் செயல்பாடுகளை தடைசெய்வதோடு, கூட்டணி கட்சிகளுக்குக் கூட பேச வாய்ப்பு அளிக்காத நிலைப்பாடு காங்கிரஸால் பின்பற்றப்படுவதாக குற்றம்சாட்டிய பிரதமர், “பிரதமர் பதவியை நாடுவோர் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்; குடும்ப அரசியலால் அது சாத்தியமில்லை” என்றும் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.