விக்ரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி - ரூ.10 ஆயிரம் கொடுத்து வெற்றிபெற்றிருப்பதாக அன்புமணி குற்றசாட்டு
Vikravaandi

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் பணி இன்று நடைபெற்றது. 20 சுற்றுகள் எண்ணப்பட்டத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 ஓட்டுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 ஓட்டுக்களும், நாம்தமிழர் வேட்பாளர் அபிநயா 10,602 ஓட்டுக்களும் பெற்றனர். இதில் 67,757 ஓட்டுக்கள் அதிகம் பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகள், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதுக்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதில் தோற்றுவிட்டதால் எப்போதும் தோற்றுப்போவர்கள் என்று அர்த்தம் அல்ல. வரும் சட்ட மன்ற தேர்தலில் நிலமை மாறும். ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அப்போது தோற்றுபோகும். அப்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரு பைசா கூட செயல்வு செய்யாமல் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். இதுதான் நியாயமான ஓட்டுகளாகும். ஆனால் திமுக சுமார் 250 கோடி செலவு செய்து இந்த வெற்றியை பெற்றிருக்கிறது. ஒரு ஓட்டிற்கு 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். அமைச்சர்கள் ஊர்களில் தங்கி மூன்று தவணையாக மக்களுக்கு பணம் கொடுத்திருக்கின்றனர். வெளியூர் காரர்கள் ஆங்காங்கே நின்று பணம் கொடுப்பது எல்லாம் வெளிப்படையாகவே நடந்திருக்கிறது. அதனை தடுப்பதற்கு எந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளும் இல்லை. தேர்தல் ஆணையம் என்கிற ஒரு அமைப்பு தேவையா என்று கூட எண்ண தோன்றுகிறது. அவர்களை அன்பிட் என்றுதான் சொல்வேன்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வாழும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பணம் வாங்கியதை தவறென்று நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்கு ஐநூறு ரூபாய் என்பது பெரியது. அவர்களிடம் இவர்கள் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் என்ன செய்வார்கள்? யார்தான் வாங்காமல் இருப்பார்கள்?. ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது அதிமுகவினர் யாரும் திமுகவிற்கு ஓட்டுபோட மாட்டார்கள். அந்த அளவிற்கு திமுகவை அதிமுக எதிரியாக பார்க்கும். இப்போது திமுகவிற்கே அதிமுகவினர் ஓட்டுபோட்டிருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது. இதேநிலை நீடிக்காது. வரும் சட்ட மன்ற தேர்தலில் நிலமை மாறும்’’ என்றார்.