தனியாருக்கு ஆதரவாக அரசு பேருந்துகளை நிறுத்தும் அதிகாரிகள்! -தூத்துக்குடியில் அவலம்

TNSTC NEWS

தனியாருக்கு ஆதரவாக அரசு பேருந்துகளை நிறுத்தும் அதிகாரிகள்! -தூத்துக்குடியில் அவலம்

தமிழகம் முழுவதும் கிராமங்களையும்,  நகரங்களையும் இணைக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேவை என்பதின் அடிப்படையில் லாப நோக்கிற்கு அப்பார்பட்டு நஷ்டத்தை தாங்கி கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் மூலம் மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் சாமான்ய மக்களுக்கு அரசு பேருந்து சேவை மிகவும் பயனளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேவேளை, ஓட்டுநர் இல்லை, நடத்துநர் இல்லை, ஊழியர்கள் இல்லை, பேருந்துகள் இல்லை என்று சொல்லப்படும் காரணங்களை வைத்து சமீபகாலமாக பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் நிறுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அதுவும் தனியாரிடம் போட்டி போடும் வழித்தட பேருந்துகள்தான் நிறுத்தப்படுகிறது என்பதை வைத்து பார்க்கும்போது தனியாருக்கு ஆதரவாக அரசு பேருந்துகள்  நிறுத்தப்படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.

உதாரணமாக திருவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து இயக்கப்படும் தடம் எண் : 578 என்கிற அரசு பேருந்து தனியார் பேருந்துக்கு முன்பாக கிளம்பும் நேரத்தில் இயக்கப்படாமல் வேறு வழிக்கு திருப்பிவிடப்படுகிறது. இந்த பேருந்தின் இயக்கம் அந்த சந்தேகத்தில் உள்ளது. 

2012ம் ஆண்டு நாகர்கோவில் - ராணித்தோட்டம் - 2 என்கிற டெப்போவில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி,திருவைகுண்டம்,சாயர்புரம் வழியாக தூத்துக்குடி வரை இயக்கப்பட்டது. காலை, மாலை என இரண்டு தடவை தூத்துக்குடிக்கு வந்து சென்றது. ஆரம்பத்தில் இந்த பேருந்து திருவைகுண்டத்திற்கு 7.50 மணிக்கு வந்து அங்கிருந்து 7.55 மணிக்கு கிளம்பி சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும்படியாக கால நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பிறகு திருவைகுண்டத்தில் காலையில் கிளம்பும் நேரம் 8.25 மணி என்று மாற்றப்பட்டது. இது,  திருவைகுண்டத்தில் காலை 8.10 மணிக்கு கிளம்பும் லயன் என்கிற தனியார் பேருந்துக்கு பிறகு கிளம்பி செல்லும் படியானது. தனியார் பேருந்துக்கு முன்பு கிளம்பும்  பேருந்தை, அதற்கு பிறகு கிளம்பும்படி எதற்காக மாற்றப்பட்டது என்று தெரியவில்லை. 

அதன் பிறகு இந்த பேருந்து, திருநெல்வேலி - கேடிசிநகர் டெப்போவில் இருந்து இயக்கும்போதும், அதன்பிறகு சேரன்மகாதேவி டெப்போவில் இருந்து இயக்கும்போது தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணி ஆகிய நேரங்களில் கிளம்பும்படி கால நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு நேரங்களும் மிக சரியான நேரம்தான் என்றாலும் திருவைகுண்டத்தில் காலை 8.25 மணிக்கு எடுத்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த பேருந்து, அங்கிருந்து 9.45 மணிக்கு கிளம்ப முடியவில்லை. திருவைகுண்டம் - சாயர்புரம் - தூத்துக்குடி இடையிலான தூரத்தின் பயண நேரம் சுமார் ஒன்றரை மணி நேரமாகும். ஆனால் திருவைகுண்டத்தில் 8.25 மணிக்கு எடுத்து தூத்துக்குடிக்கு 9.30 மணிக்கு சென்று அங்கிருந்து 9.45 மணிக்கும் கால நேரம் சாத்தியம் இல்லாமல் போனது. இதனால் தூத்துக்குடியில் இருந்து மாலையில் 5.45 மணிக்கு கிளம்பும் நடையும் கேள்வி குறியானது. 

திருவைகுண்டத்தில் காலை 6.00 மணி அளவில் கிளம்பி திருநெல்வேலிக்கு சென்று அங்கிருந்து 7.00 மணி அளவில் எடுத்து திருவைகுண்டத்திற்கு 7.50 மணிக்கு சென்று அங்கிருந்து 7.55 மணிக்கு கிளம்பி சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு 9.30 மணிக்கு சென்று அங்கிருந்து 9.45 மணிக்கு கிளம்பி அதே வழித்தடத்தில் திருவைகுண்டம் சென்று அங்கிருந்து திருநெல்வேலிக்கு சென்று அங்கிருந்து பிற்பகல் திரும்பி மீண்டும் திருவைகுண்டம் வந்து, அங்கிருந்து 4.00 மணியளவில் புறப்பட்டு சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு 5.30 மணிக்கு சென்று அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதை வழித்தடத்தில் திருநெல்வேலி வரை சென்று திரும்பும்படி இந்த பேருந்தை இயக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். 

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள், இந்த பேருந்தை காலை 8.25 மணிக்கு திருவைகுண்டத்தில் கிளம்பி சாயர்புரம் வழியாக தூத்துக்குடி செல்லும்படி செய்து அங்கிருந்து வேறு வழித்தடத்திற்கு திருப்பி விட்டுவிடுகின்றனர். தூத்துக்குடியில் காலை 10.00 மணிக்கு கிளம்பும் லயன் என்கிற தனியாருக்கு முன்னதாக கிளம்பும் 9.45 மணி சர்வீஸ், கட் திருவைகுண்டத்தில் மாலை நேரத்தில் எடுக்கும் சர்வீஸும் கட் ஆகியுள்ளது. கேட்டால் இதோ விடுகிறோம் அதோ விடுகிறோம் என்கிறார்கள் ஆனால் அது நடந்த பாடில்லை. 

எனவே கோரிக்கை வைக்கும் வழித்தடம் மற்றும் நேரங்களில் தடம் எண்: 578 என்கிற பேருந்தை இயக்க வேண்டும். திருவைகுண்டத்தில் காலை 8.25 எடுத்து ஒரு பேருந்தை மதுரை அல்லது திருச்சி அல்லது இராமேஸ்வரம் சென்று வரும்படி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.