சாத்தான்குளம் பஸ் டெப்போவை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுப்பாரா துணை முதல்வர்?
sathankulam
எதுவுமே முழுமையாக இயக்கப்படாமல் இருந்தால் இருந்தும் இல்லாதது போல் இருக்கிறது என்பார்கள். அப்படித்தான் இருந்தும் இல்லாதது போல் இருக்கிறது சாத்தான்குளம் பஸ் டெப்போ.
போதுமான போக்குவரத்து வசதிகள் மூலமே மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது அத்தனை அரசு நிர்வாகங்களுக்கும் தெரியும்.அதனடிப்படையில்தான் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு நிர்வாகங்கள் மெனக்கிடுகின்றன. அந்த வகையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைப்பது குறித்த தீர்மானம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முயற்சியின் பேரில் சாத்தான்குளம் பகுதியில் தனியாரிடம் இலவசமாக பெற்ற நிலத்தில் எம்.பிக்கள் சசிகலாபுஷ்பா, நட்டர்ஜி ஆகியோரின் எம்.பி நிதியில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக டெப்போ கட்டப்பட்டது. 2017ம் ஆண்டு இந்த பணிமனையை அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறந்து வைத்தார். அப்போது சாத்தான்குளத்தில் இருந்து விரைவில் நாசரேத்,ஏரல்,சாயர்புரம்,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்கள் வழியாக பழனி, கோவை,திருப்பூர்,வேளாங்கன்னி,இராமேஸ்வரம்,திருச்சி உள்ளிட்ட தொலை தூரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் டிரைவர் இல்லை, நடத்துனர் இல்லை என்பது போன்ற காரணங்களால் அச்சேவைகள் உடனே தொடங்கப்படவில்லை. வெறும் 7 பேருந்துகளை சுற்றுவட்டாரத்திற்கு இயக்கும் டெப்போவாகவே இயங்க தொடங்கியது. இதுவரை அப்படித்தான் இயங்குகிறது. இந்த டெப்போ இருந்தும் இல்லாதது போன்றுதான் இருக்கிறது.
தற்போதைய திமுக அரசு அமைந்ததும் உள்ளூர் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் இந்த பணிமனையை பார்வையிட்டனர். அவர்களும் விரைவில் அனைத்து வழித்தடங்களுக்கும் சாத்தான்குளம் டெப்போவில் இருந்து பேருந்துகள் இயக்கும் நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல் அங்கிருந்தே அப்போதைய போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் பேசி, அவரின் உத்தரவாதத்தை வைத்து பத்திரிக்கையாளர்களிடம் உறுதியளித்தனர்.
இதனால் சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இ ருந்தனர். இன்னமும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியபாடில்லை. அதிகாரிகளை பொறுத்தவரை பல்வேறு வழித்தடங்களுக்கு டைம்போட்டு வைத்து பேருந்துகளை இயக்க தயாராக இருக்கின்றனராம். அதற்கு அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தால் பல்வேறு வழித்தடங்களுக்கு உடனே பேருந்துகள் இயக்கப்படலாம் என்கிறார்கள். அப்படியானால் அதற்கான அனுமதியையும், அதற்கு தேவையான உதவிகளையும் அமைச்சர் செய்து கொடுத்தால் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்திலும் சற்று கவனித்தை செலுத்தி, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது சாத்தான் குளத்தில் இருந்து நாசரேத்,ஏரல்,சாயர்புரம்,தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகளை இயக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி, சாயர்புரம்,ஏரல்,நாசரேத்,சாத்தான்குளம்,திசையன்விளை,உவரி இடையே இருமார்க்க பேருந்துகளையும், திருவைகுண்டம், சாயர்புரம்,தூத்துக்குடி,மாசார்பட்டி,இருக்கன்குடி,சாத்தூர் இடையே ஒரு பேருந்தையும், கோவில்பட்டி,புதியம்புத்தூர்,புதுக்கோட்டை,ஏரல்,குரும்பூர்,திருச்செந்தூர் இடையே ஒரு பேருந்தையும், நாகர்கோவில்,திருநெல்வேலி,திருவைகுண்டம்,தூத்துக்குடி இடையே ஒரு பேருந்தையும் இயக்குவதற்கு காரணமாக இருந்தார். அதன் பிறகு உவரியில் இருந்து தூத்துக்குடி செல்லும் 145 எஸ் எஸ் எஸ், கோவில்பட்டியில் இருந்து ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் என் 349 ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை அந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதன் பிறகு இந்த பகுதியில் புதிய பேருந்துகள் எதுவுமே தொடங்கிவைக்கப்பட்டு, இயக்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது. அந்த குறையை போக்க சாத்தான்குளம் டெப்போவில் இருந்து புதிய பேருந்துகளை இயக்குவதே சரியான தீர்வாகும்.