திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் பாகன், அவரது உறவினர் பலி
Thiruchendur Murugan
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்கிற பெயரில் பெண் யானை இருக்கிறது. இந்த யானை இன்று(18.11.2024)கோபத்தில் அதன் பாகன் உதயகுமார்(45) மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகியோரை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாகனின் அறிவுறுத்தலின்படி தெய்வானை ஆசி வழங்குவது வழக்கம். அந்த வகையில் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று திடீரென ஆத்திரம் கொண்டு, கூடவே இருக்கும் பாகன் உதயகுமாரையும், அவரது உறவினர் சிசுபாலன் என்பவரையும் மிதித்தும், துதிக்கையால் தாக்கியும் கொன்றுவிட்டது. யானை தெய்வானைக்கு உதயகுமார் உணவு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நாகர்கோவிலை சேர்ந்த அவரது உறவினர் சிசுபாலன் நின்று கொண்டிருந்தார். அவர் யானையுடன் செல்பி எடுத்தார் என்று கூறப்படுகிறது. அப்போது திடீரென கோபமடைந்த யானை, சிசுபாலனை முதலிலும், தடுக்க முயன்ற உதயகுமாரையும் அடுத்தடுத்து தாக்கி கொன்றிருக்கிறது. பக்தர்கள் நிற்கும் இடத்தை தாண்டி யானையின் கூடாரத்துக்குள் சென்ற சிசுபாலன் நடவடிக்கையை யானை ஏற்றுக் கொள்ளாமல் தாக்கியிருக்கலாம் என்கிறார்கள். இது குறித்து திருச்செந்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதுடைய தெய்வானை என்கிற இந்த யானையின் முதல் பெயர் பிரிரோனா. அசாமை சேர்ந்த லீலாபோரா என்பவருக்கு சொந்தமானதாகும். அதனை திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த தேவதாசசுந்தரம் விலை கொடுத்து வாங்கி, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழங்கினார். அப்போதுதான் பிரிரோனா என்கிற பெயர் தெய்வானை என்று மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தெய்வானைக்கு 6 வயது ஆகும். அதேநாளில் தேவதாச சுந்தரம் குமரன் என்கிற 3 வயது யானையையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வாங்கி கொடுத்தார்.
இடையில் திருச்செந்தூரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த யானை, அங்கு காவடி காளிதாஸ் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அப்போது மன அழுத்தத்தில் இருந்த இந்த யானையை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த போது தன்னை குளிப்பாட்டிய சரன் என்பரை தூக்கி வீசி தாக்கியது. தொடர்ந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்ததாலும், பாகன்கள் அதனை கையாள பெரும் முயற்சி எடுக்க வேண்டியது இருந்தது என்பதாலும், மீண்டும் அசாமிற்கே அனுப்பி வைத்துவிடும்படி அசாம் அரசு கேட்டது. முறையாக பராமரிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தின் பேரில் தொடந்து தெய்வானை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது அந்த யானை. இந்த யானையுடன் வழங்கப்பட்ட குமரன் என்கிற யானை, யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு அழைத்து சென்றிருந்த போது, அங்கு காட்டு யானைகள் தாக்கியதில் காயமடைந்து திரும்பியது. அதன் பிறகு அது நோய்வாய்பட்டு இறந்து போனது என்பதெல்லாம் கூடுதல் தகவலாகும்.
வெளியில் பக்தர்கள் வெள்ளத்தோடு நிற்கும் யானை, அந்த இடத்தை பக்தர்களின் இடமாக உணர்கிறது. அதனால்தான் பாகனின் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் மற்றும் பொதுமக்களோடு உலாவுகிறது. அதுவே அதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் அடைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தை தனக்கானது என உரிமை கொள்கிறது. எந்த ஒரு விலங்கும் தன்னுடைய இடத்துக்குள் அந்நியரை அனுமதிப்பதில்லை. இது இயல்பான குணம். அந்த வகையில் யானை அடைக்கப்படும் கூடாரத்துக்குள் பாகன் மற்றும் அடிக்கடி வந்துபோகிறவர்கள் தவிர வேறு யாரையும் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானை பராமரிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்றாலும் சிசுபாலன் வெளியில் இருந்து வருபவர். அப்படி வருபவர் குறிப்பிட்ட அளவோடு நடந்து கொண்டிருக்க வேண்டும். யானை மீதுள்ள பாசத்தில் அதனிடம் சிசுபாலன் அதிக உரிமையோடு நடந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. யானை அடைத்துள்ள கூடாரத்துக்குள் நுழைந்த சிசுபாலன் அதனோடு பேசிக் கொண்டே செல்பி எடுத்ததாக சொல்கிறார்கள். அதனை யானை ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சிசுபாலன் யானையின் துதிக்கை அருகே சென்ற போது, அப்படியே யானை தன் துதிக்கையால் சிசுபாலனின் கழுத்தை சுற்றி இறுக்க, அப்போது பின் பக்கத்தில் இருந்து முன் பக்கத்திற்கு ஓடி வந்த யானை பாகன் உதயகுமார், உரிமையோடு அதை தடுக்க முயற்சி செய்ய, அது உதயகுமார்தான் என்பது தெரியாமல் யானை அதே வேகத்தில் துதிக்கையால் உதயகுமாரையும் பக்கத்து சுவரோடு சேர்த்து வைத்து தாக்க, உணர்வற்றவராக அவர் கீழே விழுந்துவிட்டார். அதன் பின்னர் சிசுபாலனை கடுமையாக தாக்கி கொன்ற யானை, தனது தனது பாகன் உதயகுமாரையும் அடித்துவிட்டோமே என்று இடிந்து போய் கீழே உற்கார்ந்துவிட்டது. அப்போது பாகன் உதயகுமாரை எழுப்பிவிடும் நோக்கில் முயற்சி செய்து பார்த்ததுள்ளது. இதை பார்த்து வெளியில் நின்றவர்கள் கத்தி கதறியிருக்கின்றனர். அதேவேளை, தனது பாகன் உடலை பார்த்து தெய்வானையும் கண் கலங்கியிருக்கிறது. அதன் பிறகு பாகனை கொன்றுவிட்ட குற்ற உணர்வில், துக்கத்தில் அது உணவு சாப்பிட மறுத்த நிகழ்வும் நடந்துவிட்டது.
nadunilai.com