மழையினால் மக்கள் அவதி என சொல்லாதீர்கள் செய்தியாளர்களே.!
Rain news
எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் இருந்தால் அதனை எதிர்பார்ப்பதும், அதனால் அதற்கு மரியாதை கிடைப்பதையும் பார்கிறோம். அதுவே ஆண்டுதோறும் தவறாமல் கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாமல் போய்விடுகிறது. அப்படித்தான் ஆண்டு தோறும் மழை பெய்வதையும், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் மக்கள் பார்க்கின்றனர் போல்தெரிகிறது. மழை வெள்ளம் குறித்த செய்தி வெளியிடும் ஊடகங்கள், பத்திரிக்கைகளின் செய்தியாளர்களின் அறிவிப்புகளும் அப்படித்தான் தெரிகிறது.
நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களால் கட்டமைந்துள்ள இந்த உலகம், அவற்றின் சைக்கிள் சுழற்சியின் மூலம் தடையில்லாமல் இயங்கி வருகிறது. பஞ்ச பூதங்களில் எது குறைந்தாலோ, இல்லாமல் போனாலோ மற்றவைகள் அப்படியே இல்லாமல் போய்விடும். அவற்றின் நிலையான கட்டமைப்பும், வழக்கமான சுழற்சியுமே நம்மை இந்த அளவிற்கு வாழ வைத்திருக்கிறது. இதைவிட எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், உயிர்கள் வாழ நீர் அவசியம், அந்த நீர் கிடைக்க மழை அவசியம், அந்த மழை வருவதற்கு காற்று அவசியம், காற்று கிடைக்க மரங்கள் அவசியம், மரங்கள் வளர காடுகள் அவசியம், அந்த காடுகள் நிலையாக இருக்க கொடிய வன விலங்குகள் அவசியம், கொடிய விலங்குகள் வாழ தாவரம் உண்ணும் விலங்குகள் அவசியம், தாவரம் உண்ணும் விலங்குகள் வாழ தாவரம் அவசியம், அந்த தாவரம் வளர அதே மழை நீர் அவசியம். கடவுளால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சுழற்சிதான் நிலையான உயிர்கள் வாழ்வதற்கு வழிஅமைக்கிறது. மழை நீர் இல்லாமல் போனால் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக காலியாகிவிடும் என்பதை உணரும்போதுதான் மழைநீரின் மகத்துவத்தை அறிய முடியும்.
ஆனால் ஒரு நாள் ஒரு சில நிமிடங்கள் பெய்யும் மழையால் தேங்கும் தண்ணீரை பார்க்கும் செய்தியாளர்கள் மழையால் பொதுமக்கள் அவதி என்கிற கடுமையான வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இந்த பூமி தோன்றிய காலம் முதல் மழை பெய்து கொண்டேதான் இருக்கிறது. பூமியில் வாழும் மனிதர்கள்தான் பூமியில் ஏதோதோ மாற்றங்களை செய்து அதில் வெள்ள ஓட்டத்தையும், நிலச்சரிவையும் உண்டாக்கிவிடுகிறார்கள். பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடும் என்று ஐந்து வயது குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். அதை ஆரம்பத்திலேயே அறிந்திருப்பதால்தானே கடலை நோக்கி ஓடும் மழைநீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய பழகினோம். தண்ணீர் ஓட்டத்தின் இயல்பை அறிந்த நாம்தானே மேடுகளிலும், பள்ளங்களிலும் வீட்டை கட்டுகிறோம். மழை காலங்களில் வெள்ள நீர் சூழும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்த நம்முன்னோர் வாய்க்கால், வரப்பு, வடிகால் என்று எத்தனையோ நீர் போக்கு வசதிகளை செய்து வைத்தார்கள். தேவையான காலம் வரை நீரை பக்குவமாக சேர்த்து வைக்கதானே அனைகளை கட்டினார்கள்?.
ஆனால் இப்போது, முறையற்ற இருப்பிடம் அமைப்பு, வடிகால்களுக்கு முக்கியத்தும் கொடுக்காதது, தனது தேவைக்காக குளம், குட்டைகளை மேடுபள்ளங்களாக ஆக்கிபோடுவது, தெருக்கள், வீடுகள் தோறும் நீர் உறியாத சிமெண்ட் தளம் அமைப்பது என்று எல்லாமே மனிதன் தான் தவறு செய்கிறான். ஒரு மழை காலத்திற்கும், மற்றொரு மழைகாலத்திற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. அதற்கு முன்னேற்பாடுகள் செய்வதில்லை. நீர் உறுஞ்சும் நிலத்தையே பார்க்க முடியாத தளத்தை போட்டு வைத்து அதுதான் சிறந்த தளம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பது யார் தவறு?. சிறிய மழை பெய்தாலே அங்கே தண்ணீர் தேங்கிவிடுகிறது. அதனால் ஏற்படும் இடையூறுகளை பார்த்து அய்யோ அம்மா என்று கத்துவது. பாய்ந்தோடு அளவிற்கு மழை பெய்கிறதே என்று சந்தோஷம் கொள்வதற்கு பதிலாக கத்துவதும், கதறுவதும்தான் நடக்கிறது. அப்படி தண்ணீர் வந்தால் சிரமம் இல்லாமல் வடிவமைத்துக் கொள்வது யார் பொறுப்பு?. இதையெல்லாம் பார்க்கும் மீடியாக்கள், வெள்ளத்தில் மக்கள் மிதக்கிறார்கள், வெள்ளத்தால் மக்கள் அவதி என்று அதிகப்படியான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான வார்த்தையாகும். மென்மையான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த வேண்டும். ஒரிரு வருடங்கள் மழை பெய்யாமல் தண்ணீர் கிடைக்காமல் போனால் என்னாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இந்த வார்த்தைகள் மக்கள் மனதில் ஒரு எதிர்ப்பு சிந்தனையையே ஏற்படுத்தும், ஒட்டு மொத்த மக்களும் அப்படி எதிர்ப்பு சிந்தனை கொண்டால் மழையே இல்லாமல் போகலாம் அல்லது அதிக அளவில் கொட்டி தீர்த்துவிடும் நிலை ஏற்படலாம். இதை நம்புவோர் மட்டும் நம்பட்டும், நம்பாதவர்களை பற்றி கவலை இல்லை.
நமக்கு பிடித்த ஒரு விஷேசம் நமது நினைவுக்கு வந்தாலே நம் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் அல்லவா, அப்படித்தான் மழை காலமும் நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மழை பெய்யும் போது வீட்டிற்கு வெளியில் வந்து நனைந்து கொண்டு ஆட்டம் போடும் அளவிற்கு நிலமை வடிவமைக்கப்பட வேண்டும். இப்போதைய நிலையில் அய்யயோ மழை காலம் வருகிறதே என்று அச்சம் கொள்ளும் நிலைதான் இருக்கிறது. மழைகாலத்தை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது என்கிற தொடர் செய்திகள் கூட மக்கள் மனதில் அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வழக்கமாக செய்ய கூடியதை சொல்ல கூட தேவையில்லை. ஆனால் அதை தவறாமல் செய்துவிட வேண்டும் அவ்வளவுதான்.
எனவே மழை காலத்தை வரவேற்போம், மழையினால் ஏற்படும் இயல்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயாராகுவோம்.!
ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், நடுநிலை.காம்,8056585872